1
324. புதியதோர் உலகம் செய்வோம்
"நண்பர்களே! உலக வரலாற்றின் ஒரு முக்கியமான பகுதியை நாம் உருவாக்க இருக்கிறோம். 

"பல நூறு ஆண்டுகளுக்கு வெறும் காடுகளாக இருந்த இந்தத் தீவு சில மேற்கத்திய நாடுகளால் ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலையாகப்  பயன்படுத்தப்பட்டது.சிறைச்சாலை என்பதை விட ஒரு கொலைக்களமாகப் பயன்படுத்தப்பட்டது என்று கூறலாம்.

"சாதாரணக் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் நாடுகளின் சிறைகளில் அடைக்கப்பட்டனர் அல்லது தூக்கிலிடப்பட்டனர். ஆனால் அரசியல் காரணங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் இந்தத் தீவுக்கு அனுப்பப்பட்டனர்.

"அடர்ந்த காடுகள் மிகுந்த இந்தத் தீவில் உணவு கிடைக்காமல் அலைந்து திரிந்தோ, காட்டு விலங்குகளால் கொல்லப்பட்டோ அவர்கள் வலியும், வேதனையும் நிறைந்த சாவைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்படாமல், கப்பல்கள் மூலம் இந்தத் தீவுகளுக்குக் கொண்டு வந்து  விடப்பட்டனர். 

"பல சமயம் குற்றம் சாட்டப்பட்ட அரசியல் கைதிகளுடன் எந்தக் குற்றமும் சாட்டப்படாத அவர்கள் குடும்பத்தினரும் இங்கு கொண்டு வந்து விடப்பட்டனர். இந்தக் கொடுமைக்கு ஆளான சிறு குழந்தைகள் எத்தனையோ பேர்.

"இங்கு கொண்டு வந்து விடப்பட்டோரில் பலர் பட்டினியாலும், காட்டு விலங்குகளால் கொல்லப்பட்டும் இறந்து போனாலும், இன்னும் பலர் தங்கள் மன உறுதியாலும், விடா முயற்சியாலும், கடின உழைப்பினாலும் எப்படியோ உயிர் பிழைத்துத் தங்களுக்கென்று ஒரு வாழ்க்கையையும் உருவாக்கிக்கொண்டனர்.  துவக்கத்திலிருந்தே அவர்கள் போராளிகள் அல்லவா? அதனால்தானே அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்? மக்கள் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடியர்களால் தங்கள் உயிருக்காகப் போராட முடியாதா என்ன?

"அவ்வாறெல்லாம் போராடிப் பல இன்னல்களை வென்று இந்தத் தீவில் தங்களுக்கென்று ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டவர்களின் சந்ததிகளாக, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இன்று நாம் ஒரு லட்சம் பேர் இந்த தீவில் வாழ்கிறோம். இந்த ஒரு லட்சம் பெரும் இந்தத் தீவைத் தங்கள் நாடாக உருவாக்கத் தீர்மானித்து, நாட்டுக்கான ஒரு அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க ஒரு அரசியல் அமைப்பு சபையை உருவாக்கி, அதற்கு நம் நூறு பேரையும் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த சபைக்குத் தலைவராக நீங்கள் அனைவரும் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். அதற்கு என் நன்றி.

"அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட குழு சில பரிந்துரைகளை செய்திருக்கிறது. அவற்றில் ஒரு பரிந்துரை அனைவராலும் ஒருமுகமாக ஏற்கப்பட்டிருக்கிறது.

"நாகரீகம் அடைந்ததாகச் சொல்லிக் கொள்ளும் நாடுகளின் சட்டங்கள் சில குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கின்றன. நம் முன்னோர்களின் அனுபவங்களை அறிந்த நாம் உயிரின் மதிப்பை உணர்ந்திருக்கிறோம். உயிர் வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை நம் முன்னோர்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறார்கள். ஒரு உயிரைக் கொல்வதைப் போன்ற கொடிய செயல் எதுவுமில்லை. ஒருவர் எத்தகைய கொடிய குற்றத்தைச் செய்திருந்தாலும், அவர் உயிரைப் பறிக்க வேறு எவருக்கோ, இந்தச் சமுதாயத்துக்கோ உரிமை இல்லை. எனவே நம் நாட்டில் எந்தக் குற்றத்துக்கு மரண தண்டனை கிடையாது. அரசியல் அமைப்புக் குழுவின் இந்த ஒரு மனதான பரிந்துரையை  இந்த அவை ஒரு மனதாக ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."

தலைவரின் வேண்டுகோளை ஏற்று 'எஸ், எஸ்' என்ற பெரும் கோஷத்துடன் அனைவரும் தங்கள் கரங்களை உயர்த்தினர்.
அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 33     
  கொல்லாமை  
குறள் 324
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.

பொருள்:
அற நூல்களால் நல்ல வழி என்று கூறப்படுவது எது என்றால் எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்ற அறத்தைப் போற்றும் நெறியாகும்.


குறள் 325 (விரைவில்)

Who Voted

Leave a comment