1
இரத்தம் – சிறுகதைமு.தளையசிங்கம்


‘இன்னும் இந்தப் பு… அவங்கட…. ஊ… போறாங்கள்!”

சோமு, ஒருக்கால் கூனிக் குறுகினன். உள்ளத்தாலும் உடலாலும் எல்லாவற்றாலும் ஒரு கணம் தடுக்கி விழுந்துவிட்டது போன்ற ஒரு நிலை. ஒரு கணத் திகைப்புக்குப்பின் அவனை அறியாமலேயே அவன் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டான். வேறு யாரும் அங்கு இருக்கவில்லை. தூரத்திலும் யாரும் வரவில்லை. அது அவனுக்கு ஒரு வகை நிம்மதியைக் கொடுத்தது. ஆனல் அது அந்தத் தடுக்கலின் நோவை, விழுந்தெழும்பியதினுள் ஏற்பட்ட வெட்கத்தைத் தனியே அனுபவிக்கத் தான்.


கமலம் அவனைத் தாண்டி அப்பால் போய் விட்டாள். ஆனல் அவள் பேசியவை அவனைச் சுற்றியே இன்னும் நின்றன. பச்சையாக நின்றன. சோமு அவற்றை ஒருக்கால் தன் வாயில் மீட்டிப் பார்க்க முயன்றன். முடியவில்லை. வாயில் வருவதற்கு முன் நினைவில் வரும்போதே நிர்வாணமாகிவிட்ட ஒரு கூச்சம் அவனைக் குறுகவைத்தது. எப்போதாவது இடுப்பிலிருந்து கழன்று விழப்போகும் சாரத்தைக் கை தூக்கும் போது கூடவரும் உடலின், உள்ளத்தின் ஓர் குறுக்கம். அவனுள் முடியவில்லை. அவனுக்கு அவை பழக்கமில்லை. அவன் வளர்க்கப்பட்ட விதம் அதற்கு மாறானது. சின்ன வயதில் இரத்தினபுரிக்கு அவன் படிக்கப் புறப்பட்டபோது ஆச்சி அவனுக்குத் திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொடுக்கும் புத்திமதிகள் அப்போது நினைவுக்கு வந்தன. அப்பு நீ மரியாதையா நடக்கோணுமப்பு. மரியாதையாப் பேசோணும். கெட்ட பேச்சுப் பேசக் கூடாது, என்னப்பு? நீங்கள் நாங்கள் எண்டுதான் எவரோடும் பேசோணும். மற்றப் பொடியளோடு சேந்து விளையாடித் திரியக்கூடாது, கெட்ட பழக்கங்கள் பழகக்கூடாது. நல்லாப் படிச்சு மரியாதையா வரோணும், என்னப்பூ?

ஒவ்வொரு சமயமும் ஊரிலிருந்து புறப்படும் போதெல்லாம் அதுதான் ஆச்சியின் வாயிலிருந்து அடிக்கடி வரும் உபதேசம். அவற்றைச் சொல்லும்போது அவனது முகத்தைத் தடவிவிட்டுக்கொண்டே தன் தலையை ஆட்டி ஆட்டி ஆச்சி சொல்லும் விதத்தை இப்போதும் அவனுல் நினைத்துப் பார்க்க முடிந்தது.


ஆச்சி ஊட்டிய பால், ஆச்சி தீத்திய சோறு என்பனபோல் ஆச்சி வகுத்த அவனுடைய வாழ்க்கை அது. அது அவனை என்றுமே கைவிட்டதில்லை. இரத்தினபுரியில் அப்பரின் கடையில் நின்று படித்த போதும் அதற்குப்பின் இப்போ கிளறிக்கலில் எடுபட்டு அதே ஊரில் வேலை பார்க்கும் போதும் அங்குள்ளவர்கள் அவனைப்பற்றிக் கூறுபவை அதற்கு அத்தாட்சிகள். தங்கமான பிள்ளை! கந்தையர் முதலாளியற்ற மகன் இருக்குதே அதுதான் பிள்ளை! அவனே தன் சொந்தக் காதால் அவற்றைக் கேட்டிருக்கிறான். அப்படி வளர்க்கப்பட்டதினால்தானா இப்போ கமலம் சொன்னதை அவனுள் திருப்பிச் சொல்ல முடியாமல் இருந்தது?


ஆனல் அதுதான் காரணமென்றால் கமலத்தால் கூட அப்படிப்பேச முடியாதே! சோமுவுக்கு ஆச்சரியமாய் இருந்தது. அவனைவிட வித்தியாசமாய் கமலம் வளர்க்கப்படவில்லையே! அவனைப் போலத் தானே அவளும் வளர்க்கப்பட்டாள்! அவளின் அப்பர் கார்த்திகேசரும் கொழும்பில் ஒரு முதலாளி. கந்தையரை விடப் பெரியமுதலாளி. ஏன், கமலத்தின் ஆச்சியும் அதே தங்கந்தானே? சோமுவுக்கு வேறு நினைவுகளும் தொடர்ந்தன. அவனைப்பற்றி இரத்தினபுரிச் சோற்றுக்கடையில் ஒவ்வொருவரும் புகழ்கிறார்கள் என்றால் கமலத்தை ஊரில் ஒன்பதாம் வட்டாரத்திலுள்ள ஒவ்வொருவரும் புகழ்ந்திருக்கிறார்கள். அவனே அதைக் கேட்டிருக்கிறான் , அதுமட்டுமல்ல. அப்படிக் கேட்கும்போது அவனுக்குத் தன்னைப் பற்றிய நினைவுதான் அடிக்கடி வரும். தங்கமான பிள்ளை. சோற்றுக்கடையில் அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். அப்போ கமலமும் அவனும் ஒரே வர்க்கமா? ஆமாம், அப்படித்தான் இருக்கவேண்டும். அப்படித்தான் அவன் நினைத்திருக்கிறான். அதே வர்க்கம், அதே கலாசாரம்.


எது யாழ்ப்பாணக் கலாசாரம் என்று சொல்லப்படுகிறதோ அதைத் தன் சொந்தக் கலாசாரமாக வைத்திருக்கும் அந்த மத்தியதர வகுப்புக்கே உரிய பாணியில் எப்படி சோமு வளர்க்கப்பட்டானோ அப்படித்தான் கமலமும் வளர்க்கப்பட்டாள். சோமுவுக்கு இன்னும் அந்தக் கலாசாரத்தின் தரத்தில் சந்தேகம் ஏற்படவில்லை. சந்தேகம் ஏற்படும் என்ற நினைவே அவனுக்கு இல்லை. ஒன்பதாம் வட்டாரத்திலிருந்து பத்தாம் வட்டாரத்துக்கு பஸ்ஸுக்காக நடந்துவர முன் அடுத்தவளவில் உள்ள ஐயனார் கோயிலில் கும்பிட்டு விட்டு ஆச்சியையும் கொஞ்சி விட்டுப் புறப்படும்போது வட்டமாய் உடைந்த தேங்காய்ப் பாதிகளைக் கையில் வைத்துக்கொண்டு *பத்திரமாய்ப் போய்வாப்பு" என்று வழியனுப்பிய அந்த உருவம் அவன் நெஞ்சைவிட்டு என்றுமே மறையாது. அது இருக்கும் வரைக்கும் யாழ்ப்பாணக் கலாசாரத்தில் அவனுக்கிருக்கும் நம்பிக்கையும் போகாதென்றே அவனுக்குப்பட்டது. எப்படி அவனது ஆச்சி அந்தக் கலாசாரத்தின் உருவமாகத் தெரிகிறளோ அப்படித்தான் கமலமும் அவனுக்கு ஒரு காலத்தில் தெரிந்தாள். தலைகுனிந்து மணவறையில் பொன்னம்பலத்துக்குப் பக்கத்தில் அவள் இருந்த காட்சி சோமுவுக்கு இன்னும் நினைவிருக்கிறது. கழுத்தில் கிடந்த தங்கக் கொடியின் பின்னணியில் பொலிந்து சிரித்த முகத்தோடு அவனைக் காணும் போதெல்லாம் ‘எப்படித் தம்பி?’ என்று அவள் விசாரிப்பது இன்னும் அவனின் நினைவை விட்டு மறையவில்லை. அவளைப்போலத்தான் இளமையில் அவனது ஆச்சியும் இருந்திருப்பாள் என்று அவன் நினைத்திருக்கிருன், ஆச்சியைப்போலத்தான் கமலமும் பிற்காலத்தில் வருவாள் என்று அவன் கற்பனை செய்திருக்கிருன். ஆனால் கமலம் அப்படி வரவில்லை. அவள் இப்போ பேசிக்கொண்டு போனது போல் அவனது ஆச்சி ஒருநாளும் பேசியதேயில்லை.


கமலத்துக்குப் பைத்தியமா?


ஊர் அப்படித்தான் சொல்கிறது. பொன்னம்பலம் செத்தபின் அவள் அப்படி ஒருகோலத்தில் தான் திரிகிறளாம். வீட்டில் இருப்பதில்லை. வடிவாக உடுப்பதில்லை. சரியாகச் சாப்பிடுகிறாளோ தெரியாது. இப்போ எவ்வளவோ மெலிந்து விட்டாள். முன்பு பூரித்துத் தெரிந்த முகம் இப்போ எவ்வளவு கோரமாக இருக்கிறது! வைத்தியம் எதுவும் பலிக்கவில்லை. கல்யாணம் செய்யவும் விரும்பவில்லை. எங்கெல்லாம் திரிகிறாளோ தெரியாது. யார் வீட்டில் படுக்கிறாளோ என்னென்ன செய்கிறாளோ தெரியாது. வீட்டில் அவளைக் கட்டிவைத்துக் கூடப் பார்த்திருக்கிறார்களாம். ஆனால் முடியவில்லை. அப்படியெல்லாம் அவளைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். பார்த்ததில்லை. எவ்வளவோ நாட்களுக்குப்பின் இன்றுதான் சோமு அவளைப் பார்த்திருக்கிறான். அதனால்தான் தூரத்தில் வரும்போதே அவன் சிரிக்கமுயன்றான், ஆனல் அவள் அடையாளம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. மாறாக அப்படிப் பச்சையாகப் பேசிக்கொண்டு போகிறாள். சுத்தப் பைத்தியம்! ஆனல் சுத்தப் பைத்தியம் என்றால் அவள் அப்படிப் பேசியிருக்கமாட்டாளே! சோமுவுக்கு அது நெஞ்சை உறுத்திற்று. அவள் சொன்னதில் உண்மை இருந்தது. அதுதான்! அவளைப் பைத்தியம் என்று தட்டிக்கழிக்க அவனால் முடியவில்லை. ஏதோ ஒன்று பிழைப்பதுபோல் பட்டது. அவளிலும் குற்றமில்லை தன்னிலும் 
Be the first to vote for this post!

Leave a comment