1
ஏடகம் வரலாற்று உலா : 7 டிசம்பர் 2019
தஞ்சாவூரைத் தலைமையகமாகக் கொண்டு பல்துறைகளில் சாதனைகளைப் பதித்து வருகின்ற ஏடகம் மேற்கொண்டு வரும் அரிய பணிகளில் ஒன்று வளரும் இளைஞர்கள், மாணவர்களிடையே வரலாற்று ஆய்வுத்தேடலைப் பற்றிய எண்ணங்களை உருவாக்குவதும், பொதுமக்களிடையே வரலாற்று உணர்வினை மேம்படுத்துவதும், இத்தகைய விழிப்புணர்வினை உண்டாக்க தொல்லியல் தடம் தேடிச் செல்வதும் ஆகும். அவ்வகையில் 7 டிசம்பர் 2019 அன்று வரலாற்று உலா சிவகங்கை மற்றும் காரைக்குடி பகுதிகளுக்குச் சென்றோம். அப்போது கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டினைப் பற்றி முன்பொரு பதிவில் கண்டோம். அங்கு உலா சென்ற அனுபவத்தை இப்பதிவில் காண்போம்.


தஞ்சாவூரில் தெற்கு வீதியில் உள்ள ஏடகம் அலுவலகத்திற்கு அருகில் இருந்து எங்களது பயணம் ஆரம்பமானது. அங்கிருந்து கானாடுகாத்தான் அரண்மனையை நோக்கிச் சென்றோம். 


கானாடுகாத்தான் அரண்மனை, காரைக்குடி வட்டம், சிவகங்கை மாவட்டம்

தமிழ்நாட்டில் காரைக்குடி, பள்ளத்தூா், ஆத்தங்குடி மற்றும் கோதமங்களம் போன்ற பகுதிகளில் செட்டிநாடு வீடுகள் உள்ளன. அந்த வீடுகளை அரண்மனைகள் என்று கூறலாம். மிகுந்த வேலைப்பாட்டிற்கும், இறக்குமதி செய்யப்பட்ட உயா் வகை மரங்கள் மற்றும் கண்ணாடி வேலைப்பாடுகளுக்கும் அவை புகழ் பெற்றவையாகும். அவ்வகையில் முதலில் கானாடுகாத்தான் அரண்மனைக்குச் சென்றோம்.  கண்களுக்கு விருந்தாக, ஒரு பிரம்மாண்டத்தை அங்கு கண்டோம். அழகான நுழைவாயில். கடந்து உள்ளே சென்றதும் மேலே இரு புறமும் திண்ணைகள். உள்ளே பெரிய அறைகள், தாழ்வாரங்கள், முற்றங்கள், ஜன்னல்கள், பெரிய கதவுகள், தூண்கள், தரை, கூரை, மாடி என்று ஒவ்வொன்றும் வியப்பை உண்டாக்கின. அனைத்திலும் அழகான, நுணுக்கமான வேலைப்பாடுகளைக் காணமுடிந்தது. வெளிச்சமும், காற்றோற்றமும், தண்ணீர் வடிகால் அமைப்பும் இந்த அரண்மனையின் சிறப்புக்கூறுகளாகும். ஆளுயர கண்ணாடிகள், யானைத் தந்தங்கள், சிற்பங்கள், இயற்கை வண்ணங்களைக் கொண்ட ஓவியங்கள் ஒவ்வொன்றும் பிரமிப்பை ஊட்டுவனவாக உள்ளன. நூற்றாண்டை நெருங்கும் நிலையிலும் அந்த அரண்மனை மெருகு குலையாமல் இருப்பதைக் காணமுடிந்தது. அடுத்தபடியாக ஆத்தங்குடி அரண்மனைக்குச் சென்றோம்.      

ஆத்தங்குடி அரண்மனை, காரைக்குடி வட்டம், சிவகங்கை மாவட்டம்இதுவும் சற்றொப்ப அதன் வடிவிலேயே உள்ளது. நுழைவாயில் தொடங்கி ஒவ்வொரு அமைப்பையும் ரசித்துக்கொண்டே சென்றோம்.   இந்த அரண்மனை சிறிய நுழைவாயிலைக் கொண்டு அமைந்துள்ளது. உள்ளே படிகளில் ஏறும்போது இரு பக்கங்களிலும் முற்றம் போன்ற அமைப்பு உள்ளது. அடுத்து இரு புறங்களிலும் பெரிய திண்ணைகள் காணப்படுகின்றன. தேக்கு மரத்தால் ஆன பெரிய கதவுகள் உள்ளன. கதவுகளில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த கதவுகளைக் கடந்து உள்ளே சென்றதும் அரண்மனையில் உள்ள தோற்றத்தைத் தருகின்ற பெரிய செவ்வக வடிவிலான அறை அமைந்துள்ளது. அதன் கோயிலின் அமைப்பைப் போன்ற கட்டுமானங்கள் காணப்படுகின்றன. மேல் கூரையில் ரசாயனக் கலவையைக் கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள் காணப்படுகின்றன. உள் பகுதியில் செல்லும்போது அங்கே நடுவில் முற்றம் போன்ற அமைப்பு உள்ளது. அதனைச்சுற்றி அமைந்துள்ள கூடத்தின் வலது மற்றும் இடது புறங்களில் பல சிறிய அறைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு அறைக்கும் இடையே ஜன்னல்கள் காணப்படுகின்றன. ஜன்னல்களின் மேல் பகுதியில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அடுத்த நிலையைத் தாண்டிச் செல்லும்போது அடுத்தள்ள தளத்திலும் இவ்வாறான அமைப்புகள் காணப்படுகின்றன. சுவற்றிலும், கூரையிலும், ஜன்னல்களிலும் பலவித ஓவியங்கள் உள்ளன. அடுத்தபடியாக எங்கள் பயணம் ஆத்தங்குடியில் உள்ள சிவன் கோயிலை நோக்கி அமைந்தது.


ஆத்தங்குடி மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில், காரைக்குடி வட்டம், சிவகங்கை மாவட்டம்


கோயிலுக்கு எதிரில் குளம் உள்ளது. ராஜ கோபுரத்தின் வலது புறத்தில் கணபதி சன்னதியும், இடது புறத்தில் தெண்டாயுதபாணி சன்னதியும் உள்ளன. ராஜ கோபுரத்தை அடுத்த உள்ளே செல்லும்போது அடுத்த நுழைவாயில் உள்ளது.  உள்ளே செல்லும்போது கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. அடுத்து தெற்கு நோக்கிய நிலையில் மீனாட்சி அம்மன் சன்னதி உள்ளது. சன்னதிக்கு முன்பாக துவாரபாலகிகள் உள்ளனர். அடுத்து பைரவர் சன்னதி உள்ளது. கருவறைக்கு செல்லும் முன்பாக வாயிலின் வலது புறத்தில் விநாயகர், இடது புறத்தில் முருகன் உள்ளனர். இரு புறங்களிலும் துவாரபாலகர்கள் உள்ளனர். திருச்சுற்றில் சூரியன், கணபதி, சோமாஸ்கந்தர், 63 நாயன்மார்கள் உள்ளிட்டோர், விஸ்வேசர் விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகம் (முன்பாக மயில், வேல்),  மலைமகள், திருமகள், கலைமகள், ஆகியோர் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார் ஆகியோர் உள்ளனர். செல்லும்வழியில் சொக்கலிங்கம்புதூர் என்னுமிடத்தில் ஆத்தங்குடி கற்கள் தயாரிக்கும் இடத்திற்குச் சென்றோம்.


சொக்கலிங்கம்புதூர், காரைக்குடி வட்டம்

அரண்மனையில் பதிக்கப்பட்ட கற்களைப் பற்றிப் பேசும்போது அங்கிருந்தோர் அக்கற்களில் ஒருவகையான கற்கள் அப்பகுதியைச் சேர்ந்த ஆத்தங்குடியில் தயாரிக்கப்படுவதாகக் கூறினர். எங்களின் அடுத்த இலக்கு அந்தக் கற்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம். நாங்கள் சென்ற பகுதியில் அக்கற்களைத் தயாரிக்கின்ற நிறுவனம் இருக்கும் இடத்தை அறிந்து அங்கு சென்றோம். இவ்வகையான கற்கள் சிமெண்ட், மணல், ஸிந்தட்டிக் ஆஃஸைடு போன்றவை கொண்ட செய்யப்படுகின்றன. சதுரக் கண்ணாடி ஒன்றின்மீது இரும்பால் செய்யப்பட்ட ஒரு கூட்டினை வைத்து அதில் தேவைப்படுகின்ற திரவ வடிவிலான வண்ணங்களை குறிப்பிட்ட இடைவெளியில் ஊற்றுகின்றனர். அதன் மேல் மணலைப் பொடியாகத் தூவி அனைத்து இடத்திற்கும் பரவும் வகையில் சலித்து, பின்னர் கலவையை இட்டு அதனைப் புரட்டிக் காண்பிக்கும்போது கண்ணாடி வழியாக அந்த டிசைன் தெரிகிறது. பின்பு அதனை நன்கு நீரில் ஊறவைத்து தேவைப்படும் நிலையில் கற்களை, கண்ணாடியிலிருந்து பிரிக்கின்றனர். இவ்வாறாக கல் முழு வடிவம் பெறுகிறது. வடிவமைத்து, பின் வெயிலில் காய வைக்கின்றனர். அக்கற்களில் உள்ள வேலைப்பாடுகள் அழகினைத் தருகின்றன. நாங்கள் இன்று பார்த்த இரு அரண்மனைகளிலும் இவை போன்ற கற்களைக் கண்டோம்.  ஆத்தங்குடி பகுதியில் உள்ளோர் தம் வீடுகளை மென்மேலும் அழகூட்ட இவ்வகைக் கற்களைப் பயன்படுத்துகின்றனர்.


மருதுபாண்டியர் கோட்டை, அரண்மனை சிறுவயலĮ

Who Voted

Leave a comment