1
விக்கிப்பீடியா வேங்கைத்திட்டம் 2.0 : முதலிடத்தில் தமிழ்
வேங்கைத்திட்டத்தில் இந்திய அளவில் 331 பயனர்கள் 16 மொழிகளில் 13,490 கட்டுரைகள் எழுதியுள்ளனர். அவற்றில் 62 பயனர்களின் 2959 கட்டுரைகளைக் கொண்டு தமிழ் விக்கிப்பீடியா முதல் இடத்தைப்பெற்றுள்ளது.


இந்திய அளவில் 331 பயனர்களில் நான் ஒன்பதாவது இடத்தையும், தமிழக அளவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளேன் என்பதையும் மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன். என் முயற்சியில் துணை நின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

புகைப்படம் நன்றி : புதிய தலைமுறை

விக்கிப்பீடியா அண்மையில் வேங்கைத்திட்டம்2.0 (10 அக்டோபர் 2019 -10 ஜனவரி 2020),  ஆசிய மாதம் தொடர் தொகுப்பு 2019 (1 நவம்பர் 2019 - 7 டிசம்பர் 2019) மற்றும் பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர்  (1 நவம்பர் 2019 -10 ஜனவரி 2020) என்ற மூன்று போட்டிகளை அறிவித்திருந்தது. அவற்றில் வேங்கைத்திட்டத்தில் இந்திய அளவில் தமிழ் மொழி முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

வேங்கைத்திட்டம் 2.0முதல் வேங்கைத்திட்டம் போல, 2019ஆம் ஆண்டு, விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுள் நிறுவனமும் இணைந்து இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம், விக்கிமீடியா இந்தியா, இந்திய விக்கிமீடியா சமூகங்கள் மற்றும் பயனர் குழுக்களின் உறுதுணையுடன் இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் உள்ளூர் வாசகர்களின் தேவைக்குத் தக்க உயர் தரக் கட்டுரைகளை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுத்தது.  ஒவ்வொரு மாதமும் சிறப்பாகப் பங்களிப்பவர்களுக்கு தனிப்பட்ட பரிசுகள் வழங்குவதுடன் ஒட்டுமொத்தமாகச் சிறப்பாகச் செயற்படுகிற விக்கிப்பீடியா சமூகத்துக்குத் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.  கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து புதிய கட்டுரைகளை உருவாக்குதல் அல்லது ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்குதல், ஒவ்வொரு போட்டிக் கட்டுரையும் குறைந்தது 300 சொற்களையும், 6000 பைட்டுகள் அளவையும் கொண்டதாக அமைய வேண்டும் என்பன உள்ளிட்டவை இப்போட்டிகளின் விதிகளாக இருந்தன.


முதல் இடத்தில் தமிழ் விக்கிப்பீடியா

விக்கி வேங்கைத்திட்டம் 2.0இல் 62 பயனர்கள் கலந்துகொண்டு 2959 கட்டுரைகளை உருவாக்கி தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இரண்டாவது இடத்தை பஞ்சாபி (குர்முகி) மொழியும் (1768 கட்டுரைகள்), மூன்றாம் இடத்தை வங்காள மொழியும் (1460 கட்டுரைகள்) பெற்றுள்ளன.  உருது (1377), சந்தாலி (566), இந்தி (417), தெலுங்கு (416), கன்னடம் (249), மலையாளம் (229), மராத்தி (220), அஸ்ஸாமிய மொழி (205), குஜராத்தி (202), ஒடியா (155), துளு (32), சமஸ்கிருதம் (19) என்ற வகையில்  கட்டுரைகளைக் கொண்டு அமைந்துள்ளன.


பயனர்கள் மிகவும் ஆர்வமாகவும், முனைப்போடும் ஆரோக்கியமான போட்டியினை தமக்குள் உண்டாக்கி எழுதுவதை ஆரம்பம் முதல் காணமுடிந்தது. ஒவ்வொருவரும் மிக ஈடுபாட்டோடு தமக்குள் ஓர் இலக்கினை அமைத்துக்கொண்டு தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை உருவாக்குதல் அதே சமயத்தில் எந்த நிலையிலும் தரம் குறைந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தனர். புதியவர்களும் ஆர்வமாக எழுதியதைப் போட்டிக்காலத்தில் காணமுடிந்தது. மூத்த பயனர்களும், வேங்கைத்திட்ட நடுவர்கள் உள்ளிட்ட நிர்வாகத்தினரும் போட்டியில் கலந்துகொண்டோரை சிறப்பாக வழிநடத்திச் சென்றனர்.   இவ்வாறாக தமிழில் தொடர்ந்து பயணித்தோமேயானால் மிகச் சிறந்த பதிவுகளை தமிழ் விக்கிப்பீடியாவில் கொணர முடியும் என்ற நம்பிக்கையினை என்னுள் இந்த போட்டியானது விதைத்தது. பிற பயனர்களும் அவ்வாறான ஒரு வித்தியாசமான அனுபவத்தைப் பெற இந்த போட்டியானது மிகவும் உதவியாக இருந்தது.


தமிழ் விக்கிப்பீடியாவில் மூன்றாவது இடம்

இந்த போட்டியில் 260 கட்டுரைகளை எழுதி இந்திய அளவில் ஒன்பதாவது இடத்தையும் தமிழக அளவில் மூன்றாவது இடத்தையும் பெற்றதை பெருமையாகக் கருதுகிறேன். ஸ்ரீபாலசுப்ரமணியன் (629) முதல் இடத்தையும், ஞா. ஸ்ரீதர் (492) இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

தமிழக அளவில் (62 பயனரில்) 3ஆவது இடம்

இந்திய அளவில் (331 பயனரில்) 9ஆவது இடம்
தமிழக அளவில் மூன்றாம் இடம் (தொகுப்புப்பட்டியல் நன்றி : திரு ஜெ.பாலாஜி)

வேங்கைத்திட்டம் போட்டிக்காக எழுதிய 260 கட்டுரைகளில் நெல்லூர் சோழர்கள், மைசூர் வெற்றிலை, தொண்டைமான் வம்சம், பண்டைய தமிழகத்தில் பெயர் சூட்டும் மரபுகள், பெங்களூர் பழைய மடிவாலா சோமேஸ்வரர்கோயில், டோம்லூர் சொக்கநாதசுவாமி கோயில், சுவாதி பிரமல், லீனா நாயர் உள்ளிட்ட தலைப்புகளில் பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. அடுத்து தமிழ் விக்கிபீடியாவில் இல்லாத, இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள், ஆவணக்காப்பகங்கள், கலைக்கூடங்கள், அறிவியல் மையங்கள் மற்றும் நூலகங்கள் ஆகியவற்றைப் பற்றிய தலைப்புகளில் பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டன.  ஆசிய மாதம் தொடர்பாக ஒரு நாட்டினைத் தெரிவு செய்து அங்குள்ள பண்பாடு, கலை, சமயம் என்ற நிலையிலான பதிவுகள் ஆரம்பிக்க முடிவெடுத்து, இந்தோனேசியாவில் உள்ள அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், அரண்மனைகள், இந்து பௌத்தக் கோயில்கள் என்ற தலைப்புகளில் பதிவுகள் எழுதப்பட்டன. போட்டியின்போது திரு தகவல் உழவன் மூலமாக சில கருத்துகளைப் பெறும் வாய்ப்பினைப் பெற்றேன். அவருக்கும் திரு நீச்சல்காரன் அவர்களுக்கும், பிற நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. 

இதற்கு முன்னர் 2017இல் நடைபெற்ற விக்கிக்கோப்பைப் போட்டியில் (1 ஜனவரி 2017-31 ஜனவரி 2017) கலந்துகொண்டு 253 பதிவுகளை எழுதி மூன்றாம் இடத்தினைப் பெற்று, விக்கிக்கோப்பை வெற்றியாளர் பதக்கத்தைப் பெற்றதும் ஒரு மறக்க முடியாத அனுபவம் ஆகும். 

 

தமிழில் இல்லாததே இல்லை என்பதை உருவாக்க அனைவரும் கைகோர்ப்போம். பிற மொழிகளில் குறிப்பாக ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள, தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாத, கட்டுரைகளை மொழியாக்கம் செய்து தமிழின் பெருமை மென்மேலும் உயரச் செய்வோம். தமிழ் விக்கிப்பீடியா என்றும் தொடர்ந்து முன்னணியில் இருக்க புதியவர்களை அன்போடு அழைப்போம். அவர்களின் எழுத்துப்பணிக்குத் துணை நிற்போம். மூத்த பயனர்களின் வழிகாட்டலோடு பயணிப்போம். விக்கிப்பீட%

Who Voted

Leave a comment