1
18. சிக்னல் கிடைக்குமா?
ரகுராமன் பல்லாவரம் ரயில் நிலையத்தில்தான் அவளைப் பார்த்தான். முதலில் பார்த்தது எப்போது என்பது அவனுக்குச் சரியாகத் தெரியவில்லை.

இரண்டு மூன்று முறை பார்த்த பிறகுதான் அவள் தன் கவனத்துக்கு வந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

பல்லாவரத்தில் வசிக்கும் அவன் கிண்டியில் தான் வேலை செய்யும் அலுவலகத்துக்குச் செல்வதற்காக, தினமும் காலை எட்டரை மணிக்கு பல்லாவரம் ரயில் நிலையத்துக்கு வருவான். 

ரயில் நிலையத்தில் தினமும் எத்தனையோ முகங்கள் தென்படும். அவற்றில் சிலவற்றை அவன் பலமுறை பார்த்திருக்கிறான். அவனைப் போல் அந்த ரயில் நிலையத்துக்கு தினமும் கிட்டத்தட்ட அதே நேரத்தில் வரும் பலரின் முகங்கள் அவை. ஆனால் பார்த்த முகம் என்பதற்கு மேல் அந்த முகங்கள் பற்றி வேறு எந்த சிந்தனையும் அவன் மனதில் ஏற்பட்டதில்லை.

ஆனால், எதனாலோ அந்தப் பெண்ணின் முகத்தை இரண்டு மூன்று முறை பார்த்ததும், அவள் மீது அவனுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விட்டதாகத் தோன்றியது.

அவன் வழக்கமாக நிற்கும் இடத்துக்குச் சற்றுத் தள்ளித்தான் பெண்கள் பெட்டி இருக்கும். அவள் பெண்கள் பெட்டியில்தான் ஏறுவாள். அவன் நிற்கும் இடத்திலிருந்து சுமார் பத்து அடி தள்ளித்தான் அவள் நிற்பாள். இன்னும் பல பெண்களும் அங்கே நின்று கொண்டிருப்பார்கள். 

'அவளை மட்டும் நான் ஏன் குறிப்பாக கவனித்தேன்?' என்று அவன் தன்னையே கேட்டுக் கொண்டான்.

அவன் ரயில் நிலையத்துக்கு வருவதற்கு முன்பே அவள் வந்து நின்றிருப்பாள். 

குராமன் அந்தப் பெண்ணை கவனிக்க ஆரம்பித்துச் சில நாட்கள் ஆகி விட்டன. அவள் மீது தனக்கு ஏற்பட்டிருப்பது காதல்தான் என்ற முடிவுக்கு அவன் வந்து விட்டான்.

ஆனால் அவள் அவனை கவனித்தாளா என்று தெரியவில்லை. ரயில் நிலையத்துக்கு வந்தது முதல், ரயில் வந்து அதில் ஏறும் வரை தான் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது அவளுக்குத் தெரியுமா என்று அவன் யோசித்தான். 

அவளிடம் சென்று பேசிப் பார்க்கலாமா என்று சில சமயம் தோன்றும். ஆனால், பொது இடத்தில், அதுவும் பெண்கள் கூடி இருக்கும் இடத்தில், அவளிடம் சென்று ஏதாவது பேசி, அதனால் ஏதாவது விபரீதம் ஏற்பட்டு விடுமோ என்று பயந்தான்.

அவள் தன் முகத்தைப் பார்த்தாளா என்பது கூடத் தெரியவில்லையே!

அன்று ரயில் வந்து நின்றதும், அதில் ஏறும் வரை வழக்கம் போல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பெண்கள் பெட்டியில் ஏறுவதற்கு முன் அவள் அவன் பக்கம் திரும்பினாள். அவள் தன் முகத்தைப் பார்த்ததாகவும், தன்னைப் பார்த்துப் புன்னகை செய்தது போலவும் அவனுக்குத் தோன்றியது. ஆனால் இது உண்மையா, தன்னுடைய கற்பனையா என்று அவனுக்குப் புரியவில்லை.

டுத்த நாள் ரகுராமன் ரயில் நிலையத்துக்கு வந்தபோது அவளைக் காணவில்லை. 'இன்று அவள் வரவில்லையா, அல்லது தாமதமாக வருகிறாளா?' என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.

தனக்கு அருகில் எதோ அசைவு ஏற்பட்டதை உணர்ந்த அவன், எதோ ஒரு உள்ளுணர்வில் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தபோது, அவள் அவன் அருகில் சற்றுத் தள்ளி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான்!

ரகுராமனுக்கு உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததுபோல் இருந்தது.

எப்போதும் பெண்கள் பெட்டி நிற்கும் இடத்தில் நிற்பவள் இன்று தன் அருகில் வந்து நிற்கிறாள் என்ற உண்மையை உணரவே அவனுக்குச் சில வினாடிகள் பிடித்தன. புன்னகை செய்ய வேண்டும் என்ற உணர்வு கூடாமல் வராமல் அவள் முகத்தைப் பார்த்தான் 

அவள் அவனை நேரே பார்த்துப் புன்னகை செய்தாள்.

ரயில் வந்ததும், அவன் ஏறிய பெட்டியிலே அவளும் ஏறிக் கொண்டாள்.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 110
குறிப்பறிதல் 
குறள் 1098
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

பொருள்:
நான் பார்க்கும்போது, என்னை அன்புடன் பார்த்துச் சிரிப்பாள். அசையும் மெல்லிய இயல்பு கொண்ட அவளிடம் அப்பொழுது ஒரு அழகு தோன்றும்.

குறள் 1099 (விரைவில்)

குறள் 1097

Who Voted

Leave a comment