1
21. நல்லமுத்துவின் சங்கடம்

பொது நிகழ்ச்சிக்காக அந்த ஊருக்கு வரும் எவருமே நல்லமுத்துவின் வீட்டில்தான் தங்க வேண்டும் என்பது அந்த ஊரில் பின்பற்றப்படும் எழுதப்படாத விதி.

நல்லமுத்து அதிகம் படிக்காதவர் என்றாலும், ஊரிலேயே பெரிய செல்வந்தர், அதிக செல்வாக்கு நிறைந்தவர் என்பதுடன், எல்லோரிடமும் நன்கு பேசி அவர்களின் நன்மதிப்பைப் பெறும் திறமை பெற்றவர் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம்.

எனவே அந்த ஊர்க் கோவிலில் ஆன்மிகச் சொற்பொழிவாற்ற வந்த புலவர் அருள்நம்பியும் நல்லமுத்துவின் வீட்டில்தான் தங்கினார். 

பத்து நாள் சொற்பொழிவு. பத்து நாளும் நல்லமுத்துவின் வீட்டில்தான் தங்கினார் அருள்நம்பி. நல்லமுத்துவின் வீட்டில் வாயிலுக்கருகே இருந்த ஒரு தனி அறையில்தான் அருள்நம்பி தங்கி இருந்தார். அவர் வீட்டிலேயே சாப்பாடு.

பொதுவாக எந்த விருந்தினர் தன் வீட்டில் தங்கினாலும் அவர்கள் ஓய்வெடுக்கும் நேரம் தவிர மற்ற சமயங்களில் அவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார் நல்லமுத்து. 

பல சமயம் தன் வீட்டு வாசலில் நாற்காலிகளைப் போட்டுக்கொண்டு நல்லமுத்துவும் அவர் வீட்டில் தங்கும் விருந்தினரும் பேசிக் கொண்டிருப்பார்கள். இருவரும் மகிழ்ச்சியுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைத் தெருவில் செல்பவர்கள் வியப்புடன் பார்த்துக்கொண்டு செல்வார்கள்.    

அருள்நம்பி வந்த முதல் நாள் நல்லமுத்து அடிக்கடி அவர் அறைக்குச் செல்வதும், மாலையில் வாசலில் அவருடன் அமர்ந்து பேசுவதுமாக இருந்தார்.

ஆனால் இரண்டாம் நாள் நல்லமுத்து அருள்நம்பியிடம் அதிகம் பேச முனையவில்லை. வாசலில் அமர்ந்து பேசவும் இல்லை. அத்துடன் அதிக நேரம் வீட்டில் தங்காமல் எங்காவது வெளியே போய் வந்தபடி இருந்தார்.

அதற்குப் பின் வந்த நாட்களிலும் அப்படித்தான்.

சில நாட்களுக்குப் பின் தன் நண்பர் கஜேந்திரன் வீட்டுக்குச் சென்று அவருடன் பேசிக் கொண்டிருந்தார் நல்லமுத்து.

"ஏம்ப்பா! உன் வீட்டில யாராவது தங்கினா நீ எப்பவும் அவங்களோடதான் பேசிக்கிட்டிருப்ப. இப்ப வந்திருக்கிற அருள்நம்பியோட அதிகம் பேசற மாதிரி தெரியலியே! வாசல்ல நீங்க உக்காந்து பேசறதைக் கூட நான் பாக்கல!" என்றார் கஜேந்திரன்.

நல்லமுத்து சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு அப்புறம் சொன்னார். 

"இத்தனை நாளா என் வீட்டில வந்து தங்கினவங்க கிட்டல்லாம் நிறையப் பேசி இருக்கேன். ஆனா இவர் கிட்ட என்னால எதுவுமே பேச முடியல!" 

"ஏன்? அவர் அதிகம் பேச மாட்டாரா?"

"அப்படி இல்ல. அவர் பேசற விஷயங்கள் எனக்குப் பிடிபடல. நான் பொதுவா கோவில், சாமி, பக்தின்னு பேசினாக் கூட அவர் எனக்குப் புரியாம ஏதாவது சொல்றாரு. எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல. நிறையப் படிச்சிருக்காருல்ல? இத்தனை நாளா நடந்ததை வச்சு என்னால எல்லார்கிட்டயும் பேசிக் சமாளிக்க முடியும்னு நினைச்சேன். ஆனா இவர் கிட்ட என்னால பேச முடியல. இவரை மாதிரி படிச்ச ஆளுங்க கிட்டல்லாம் பேசணும்னா நான் இனிமே போய்ப் படிச்சுட்டுத்தான் வரணும் போலருக்கு!" என்றார் நல்லமுத்து. 

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 41
கல்லாமை 
குறள் 401:
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.

பொருள்:
நூல்களைப் படித்து நிறைவான அறிவைப் பெறாமல் ஒருவர் கற்றவரிடம் சென்று பேசுவது கட்டங்கள் இல்லாமல் தாயம் உருட்டி விளையாடுவது போல் ஆகும்.
குறள் 402 (விரைவில் 

Who Voted

Leave a comment