1
18. படிக்காதவன்!
அருளுக்குத் தான் படிக்கவில்லையே என்ற குறை எப்போதுமே உண்டு.  

மூன்று தலைமுறைக்கு முன் அவன் பரம்பரையில் வந்தவர்கள் படித்தவர்களாக மட்டுமின்றி அறிஞர்களாகவும் மதிக்கப்பட்டனர்.

ஆனால் அவன் தாத்தா ஏதோ ஒரு காரணத்தால் படிக்காமல் இருந்து விட்டார். அவர் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அவர் தந்தை இறந்ததும் அவர் தன் படிப்பை நிறுத்தி விட்டார்.

பிறகு, தன் பதினைந்தாம் வயதிலேயே அவர் விவசாயத்தையும், வியாபாரத்தையும் கவனித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார். 

வியாபாரம் பெருகிச் செல்வம் வளர்ந்ததால் தன் மகன்களையும் அவர் அதிகம் படிக்க வைக்காமல் சிறு வயதிலேயே அவர்களை வியாபாரத்தில் ஈடுபடுத்தி விட்டார். அதனால் அருளின் தந்தையும் ஐந்தாம் வகுப்பைத் தாண்டவில்லை!

'எழுதப்  படிக்கவும்,கூட்டிக் கழிக்கவும் தெரிந்தால் போதாதா, அதற்கு மேல் படிப்பு எதற்கு?' என்பதுதான் அருளின் தந்தையின் மனப்பான்மையாக இருந்ததால் அருளையும் அவர் அதிகம் படிக்க வைக்கவில்லை.

னால் தன் தந்தை, பாட்டனைப் போல் இல்லாமல், சற்று வளர்ந்ததுமே அருளுக்குக் கல்வியின் அருமை புரிந்தது. தான் படிக்கவில்லையே என்று வருந்திய அருள், நன்கு படித்தவர்கள் குடும்பத்திலிருந்து ஜெயாவைத் திருமணம் செய்து கொண்டான்.

ஜெயா அதிகம் படிக்கவில்லை என்றாலும், அவளுடைய இரு அண்ணன்களும் நன்கு படித்தவர்கள்.

"நன் படிக்காம இருந்துட்டேன். உன் அண்ணன்கள் நிறையப் படிச்சிருக்காங்க. அவங்களோட யோசனை எனக்கு உதவியா இருக்கும்னு நினைக்கிறேன்!" என்று திருமணமான புதிதில் அருள் ஜெயாவிடம் கூறியபோது ஜெயாவுக்குப் பெருமையாக இருந்தது.

ஆயினும், அருள் தான் ஜெயாவிடம் சொன்னபடி செய்யவில்லை!

அவர்கள் பையனைப் பள்ளியில் சேர்க்கும் நேரம் வந்தபோது, அவனை  ஜெயாவின் சகோதரர்கள் சிபாரிசு செய்த பள்ளியில் சேர்க்காமல் வேறொரு பள்ளியில் சேர்த்தான் அருள் 

"என் அண்ணன்களோட பையங்க அந்த ஸ்கூல்லதான் படிக்கறாங்க. அது ரொம்ப நல்ல ஸ்கூல். அதிலேயே நம்ம பையனையும் சேத்துடுங்க!" என்றாள் ஜெயா.

"எனக்கென்னவோ அந்தப் பள்ளிக்கூடம் பிடிக்கல. அவங்க படிப்பு படிப்புன்னு பையன்களை ரொம்பக் கஷ்டப்படுத்துவங்களாமே!" என்றான் அருள்.

"அது நல்லதுதானே? அப்பதானே நம்ம பையன் நல்லாப் படிப்பான்?" என்றாள் ஜெயா.

"பையன்களை வாட்டி எடுக்கற பள்ளிக்கூடம் நம் பையனுக்கு வேண்டாம்! வேற ஒரு ஸ்கூல் இருக்கு. அதுவும் நல்ல ஸ்கூல்தான். ஆனா அவங்க பையங்களைப் போட்டுப் பிழிஞ்செடுக்க மாட்டாங்க!" என்று சொன்ன அருள் தன் பையனை வேறொரு பள்ளியில் சேர்த்தான். 

அதுபோல் தன் சேமிப்பை முதலீடு செய்யும்விஷயத்திலும் ஜெயாவின் சகோதரர்கள் பரிந்துரைத்த நிறுவனப் பங்குகளிலும், பத்திரங்களிலும் முதலீடு செய்யாமல் வங்கி வைப்புகளிலும், அரசாங்கப்  பத்திரங்களிலும், வேறு சில நிறுவனங்களின்  பங்குகளிலும் முதலீடு செய்தான் அருள். 

"என்னவோ என் அண்ணங்க கிட்ட ஆலோசனை கேட்டு நடக்கப் போறதா முன்ன சொன்னீங்க! இப்ப எந்த விஷயத்திலேயுமே அவங்க சொல்றதைக் கேக்காம உங்க இஷ்டத்துக்குப் பண்றீங்க. என்னவோ போங்க!" என்று குறைப்பட்டுக் கொண்டாள் ஜெயா. 

ருபது வருடங்கள் கடந்து விட்டன. அவர்கள் பையன் பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று நல்ல கல்லூரியில் அவன் விரும்பிய படிப்பில் சேர்ந்து விட்டான்.

"நம்ம பையன் நல்ல காலேஜில சேந்துட்டான். உனக்குத் திருப்திதானே?" என்றான் அருள்.

"என் அண்ணங்க சொன்ன பள்ளிக்கூடத்தில் சேக்காம வேற ஒரு பள்ளிக்கூடத்தில நீங்க நம்ம பையனைச் சேத்ததும் நான் கூட கவலைப்பட்டேன். ஆனா நீங்க செஞ்சது சரியாத்தான் இருந்திருக்கு!" என்றாள் ஜெயா.

"ஏன், உன்  அண்ணங்களோட பையங்களும் நல்லாப் படிச்சு  நல்ல காலேஜிலதான சேந்திருக்காங்க?" என்றான் அருள்.  

"ஆமாம். ஆனா நீங்க சொன்ன மாதிரி அவங்க ஸ்கூல்ல அவங்களைக் கசக்கிப் பிழிஞ்சுட்டாங்க. ஆனா நம்ம பையன் அது மாதிரியெல்லாம் கஷ்டப்படாம, நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்கிட்டானே!" என்ற ஜெயா, சற்றுத் தயங்கி விட்டு, "எங்க அண்ணங்க செஞ்ச முதலீடுகளை விட நீங்க செஞ்ச முதலீடுகள் அதிக லாபத்தைக் கொடுத்திருக்குன்னு எங்கிட்ட எங்க அண்ணங்க சொன்னாங்க!" என்றாள்.

"அப்படியா?" என்றான் அருள்.

"ஆமாம். அது எப்படிங்க? அதிகம் படிக்காதவரா இருந்தும் நீங்க எல்லாத்தையும் சரியா யோசிச்சு செஞ்சிருக்கீங்க?" 

"ஒரு வேளை போன ஜென்மத்தில் நான் நல்லாப் படிச்சிருக்கலாம். அதுதான் இந்த ஜென்மத்தில் எனக்கு உதவி இருக்கோ என்னவோ!" என்றான் அருள்.

ஜெயா மௌனமாக இருந்தாள்.

"சரி. உன்னால இதை ஒத்துக்க முடியலேன்னா இன்னொரு காரணம் சொல்றேன்!"

"என்ன அது?' 

"ஒத்தர் செய்யற நல்ல செயல் அவரோட ஏழு தலைமுறைக்குப் பயனுள்ளதா இருக்கும்னு சொல்லுவாங்க. மூணு தலைமுறைக்கு முன்னால என் தலைமுறையில் எல்லாரும் படிச்சவங்களாத்தானே இருந்திருக்காங்க? அவங்களோட கல்வி அறிவுதான் எனக்கு உதவி செஞ்சிருக்கோ என்னவோ!" என்றான் அருள். 

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 40
கல்வி
குறள் 398:
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

பொருள்:
ஒருவர் ஒரு பிறவியில் கற்ற கல்வி அவருக்கு ஏழு பிறவிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். ('ஒருவர் கற்ற கல்வி அவருக்குப் பின் வரும் ஏழு தலைமுறைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்' என்பது இந்தக் குறளுக்கு திரு மு. கருணாநிதியின் உரை)

குறள் 399 (விரைவில்)

குறள் 397

Who Voted

Leave a comment