1
13. வேருக்கு நீர்!

ரகு பேருந்துக்காக நின்று கொண்டிருந்தபோது அதை கவனித்தான் - சாலையில் எதிர்ப்புறத்தில் நின்று கொண்டிருந்த மல்லிகா அவனை உற்றுப் பார்ப்பதை!
மல்லிகா அவன் ஊர்ப் பெண்தான். ஆனால் இருவருக்கும் இடையே பரிச்சயம் ஏற்பட்டதில்லை. 

முதலில் ரகுவுக்கு தான் பார்த்தது சரிதானா என்ற சந்தேகம் எழுந்தது. அவள் தன்னைப் பார்த்தத்தைத் தான் கவனித்து விட்டதை வெளிகாட்டிக் கொள்ளாமல் வேறு எங்கோ பார்ப்பது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டான் ரகு .

அவன் வேறு புறம் பார்த்துக்கொண்டிருந்தபோது அவள் அவனைத்தான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். வேறு புறம் பார்த்துக் கொண்டிருந்தாலும் இதை உணர்வது ரகுவுக்கு ஒன்றும் சிரமமாக இல்லை.

அவள் தன்னைப் பார்க்க்கிறாள் என்பதை உறுதி செய்து கொண்டபோது, ஓரிரு நிமிடங்கள் கழித்து ரகு சட்டென்று திரும்பி அவளைப் பார்த்தான்.

அவன் பார்வை தன்மீது விழுந்ததும், அவள் சட்டென்று தலையைக் குனிந்து கொண்டாள். அதன் பிறகு அவன் செல்ல வேண்டிய பஸ் வந்து அவன் அதில் ஏறிச் சென்றது வரை அவள் தலை நிமிர்ந்து அவனைப் பார்க்கவில்லை.

டந்ததைத் தன் நண்பன் குணசேகரனிடம் விவரித்த ரகு "நான் அவளைப் பார்த்ததும் அவ தலையைக்குனிஞ்சசுக்கிட்டா. அப்புறம் என்னை நிமிர்ந்து பாக்கவே இல்ல. இதுக்கு என்ன அர்த்தம்? அவளுக்கு என்னைப் பிடிக்கலையா?" என்றான்.

"மழை வரும் போல இருக்கே!" என்றான் குணசேகரன். அவன் இதைச் சொல்லி முடித்ததுமே சடசடவென மழை பெய்ய ஆரம்பித்தது.

"நான் என்ன கேக்கறேன், நீ என்ன சொல்ற?" என்றான் ரகு, தன் குரலில் எரிச்சலை வெளிப்படுத்தியபடி.

"கொஞ்ச நேரம் மழையை வேடிக்கை பாக்கலாமே!"

"டேய், நாம என்ன சின்னக் குழந்தைகளா?"

"வாசல்ல இருக்கற அந்த செடியைப் பாரேன்!" என்றான் குணசேகரன்.

"அதுக்கு என்ன?"

" செடி மேல மழை விழுந்ததும் அதோட மேல் பகுதியில இருக்கற இலைகள் வளையுது பாரு."

"ஆமாம். அதுக்கென்ன?"

"மழை பெய்யும்போது செடி தலை குனியறதால, அதோட தலையில் பட்ட தண்ணி வேர்ப்பகுதியில போய் விழுது. அதனால வேர்ல நீர் பாஞ்சு செடி நல்லா வளரும்!" என்று சொல்லிச் சிரித்தான் குணசேகரன்.

"அப்படின்னா...?" என்றான் ரகு குழப்பத்துடன்.

"அட முட்டாளே! நீ பாக்கறப்ப அவ தலை குனிஞ்சான்னா, உன் பார்வை மூலமா தன் மேல பாயற அன்பை அவ தன் மனசுக்குள்ள வாங்கிக்கிட்டு அவளுக்கு உன் மேல இருக்கற அன்பை அவ இன்னும் வளத்துக்கறான்னு அர்த்தம்!" என்றான் குணசேகரன்.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 110
குறிப்பறிதல் 
குறள் 1093
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

பொருள்:
அவள் என்னைப் பார்த்தாள். ஆனால் நான் அவளைப் பார்த்ததும் தலை குனிந்து கொண்டாள். அது அவள் என் மேல் கொண்ட அன்புக்கு அவள் ஊற்றும் நீர்.
குறள் 1094 (விரைவில்)

குறள் 1092

Who Voted

Leave a comment