1
17. பாரிசுக்குப் போ!
"என்ன அழகேசா, பாரிஸ்லேந்து எப்ப வந்த?" என்றார் கனகசபை.

"ரெண்டு நாள் ஆச்சு. ரெண்டு நாளும் தூங்கியே கழிச்சுட்டேன். இன்னிக்குத்தான் வெளியே வந்திருக்கேன்" என்றார் அழகேசன்.

"ஆமாம். ஜெட்லாக்னு சொல்லுவாங்களே! நான் திருப்பதியைத் தாண்டி எங்கேயும் போனதில்லை. சொல்லக் கேட்டிருக்கேன்! ஆமாம், பையன் எப்படி இருக்கான் பாரிஸ்ல?"

"அவனுக்கென்ன ஓகோன்னு இருக்கான்!" என்றார் அழகேசன் பெருமிதத்துடன். 

"ஆமாம். அவனுக்கு ஃபிரெஞ்ச் தெரியுமா?"

"தெரியாது. இப்பதான் கொஞ்ச கொஞ்சம் கத்துக்கறான்."

"அப்ப எப்படி சமாளிக்கறான்? அங்கெல்லாம் இங்கிலிஷ் அதிகம் பேச மாட்டாங்களே!" என்றார் கனகசபை.. 

"நீ பெரிய ஆளுதான் கனகசபை! திருப்பதி தாண்டிப் போனதில்லன்னு சொல்லிக்கிட்டு உலகம் முழுக்க எப்படின்னு தெரிஞ்சு வச்சிருக்கியே!" என்ற அழகேசன், தொடர்ந்து, "அவன் போனது கம்ப்யூட்டர் படிச்சுட்டுத்தானே?அதனால பாஷை தெரியாதது பெரிய பிரச்னை இல்லை" என்றார்.

"உங்க குடும்பத்தில இது ரொம்ப இயல்பு போலருக்கு. அந்தக் காலத்திலேயே உன் தம்பி அமெரிக்கா போய் அங்க செட்டில் ஆயிட்டானே!"

"ஆமாம். அவன் ஏதோ மோட்டார் மெக்கானிசம் படிச்சான். இங்க ஒரு கார் கம்பெனியில வேலை செஞ்சான். அவன் திறமையைப் பாத்துட்டு அவங்களே அவனை அமெரிக்காவுக்கு அனுப்பிச்சாங்க. அதுக்கப்பறம் அவன் அங்கியே செட்டில் ஆயிட்டான். அவனுக்கும் அமேரிக்கா போறப்ப இங்கிலிஷ் சுத்தமாத் தெரியாது. அவன் தொழில் அறிவுதான் அவனை அமெரிக்காவுக்கு அழைச்சுக்கிட்டுப் போச்சு" என்ற அழகேசன், "இப்பதான் ஞாபகம் வருது. என் பையன் தன் நண்பர்கள் சில பேருக்கு சில பொருட்கள் கொடுத்து அனுப்பி இருக்கான். பேர் வாரியா, யார் யாருக்கு என்னென்ன பொருள்னு ஒரு பேப்பர்ல குறிச்சுக் கொடுத்திருக்கான். இதோ வரேன்" என்று உள்ளே சென்றார்.

சற்று நேரத்தில் கையில் ஒரு காகிதத்துடன் வந்த அழகேசன், அதைத் தன் நண்பர் கனகசபையிடம் கொடுத்து, "என் பையன் இதைப் படிச்சு சொன்னான். ஆனா நான் சரியா ஞாபகம் வச்சுக்கறதுக்காக நீ ஒரு தடவை படிச்சு சொல்லிடு. நாளைக்கு அவன் நண்பர்கள் வந்தா பொருட்களை மாத்திக் கொடுக்காம சரியாக் கொடுக்கணும் இல்ல?" என்றார் சிரித்தபடி.

"என்ன அழகேசா! பள்ளிக்கூடப் படிப்பு அதிகம் இல்லாட்டாலும் தொழில் படிப்பு படிச்சுட்டு உன் தம்பி அமேரிக்கா போயிட்டான். உன் பையன் கம்ப்யூட்டர் படிப்பு படிச்சுட்டு பாரிஸ்ல வேலை செய்யறான். நீ இன்னும் எழுதப் படிக்கக் கூடத் தெரிஞ்சுக்காம இருக்கியே!" என்றார் கனகசபை சிரித்தபடி. 

அரசியல் இயல் 
அதிகாரம் 40
கல்வி
குறள் 397:
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

பொருள்:
கற்றவனுக்கு எந்த நாடும் எந்த ஊரும் தன் சொந்த ஊர் போல்தான் என்று இருக்கும்போது, ஒருவன் இறக்கும்வரை கல்லாமல் இருப்பது ஏன்?

குறள் 398 (விரைவில்)

குறள் 396

Who Voted

Leave a comment