1
கோவில்களில் நுந்தா விளக்கெரிப்பதற்கு முதலாம் இராஜராஜ சோழன் ஏற்படுத்திய, “சாவா-மூவா-போராடு” திட்டம்


நந்தா விளக்கு என்றால் விளக்கின் திரி தூண்டாமல் இரவும் பகலும் அணையாமல் எரியும் விளக்கு என்று பொருள். நந்தா விளக்குகள் குறித்த பல செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. சோழர்கள் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில் இவ்வகை விளக்குகள் நுந்தா விளக்கு என்றும் திருநுந்தா விளக்கு என்றும் நொந்தா விளக்கு என்றும் தூண்டாமணி விளக்கு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அளித்த சிறு சிறு நிவந்தங்கள் கோவில் உண்ணாழிகைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நந்தா விளக்குகள் ஏற்றப் பயன்பட்டன.


சாவா மூவா பேராடுகள் என்றால் சாவினாலோ மூப்பினாலோ எண்ணிக்கை குறையாத ஆடுகள் என்று பொருள். முதலாம் இராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றே சாவா மூவா பேராடு என்ற திட்டம் உருவாக வழிவகுத்தது. இந்தப் பதிவு .சாவா மூவா பேராடுகள் திட்டம் பற்றி விரிவாக அலசுகிறது.

 நந்தா விளக்கு என்றால் என்ன? இந்த விளக்கின் சிறப்பு என்ன?


 
 


கோழி முட்டை வடிவில் காணப்படும் இந்த அணையா விளக்கினை மணி விளக்கென்றும் தூங்காமணி விளக்கென்றும் குறிப்பிடுகிறார்கள். நந்தா விளக்கு என்றும் இதனைக் குறிப்பிடுவதுண்டு. நந்துதல் என்ற சொல்லுக்கு அணைதல் என்று பொருள். நந்தா விளக்கு என்றால் அணையாமல் எரியும் விளக்கு என்று பொருள். தூண்டா விளக்கு என்றும் தீண்டா விளக்கு என்றும் இத்தகைய விளக்குகள் குறிப்பிடப்படுவது உண்டு. இரவும் பகலும் எரியும் இந்த விளக்கின் திரி தூண்டாமல் அல்லது மனிதனால் தீண்டாமல் எரியும் விளக்கு என்பது இதன் பொருள்.


இந்த விளக்குகளில் உருளை வடிவிலான எண்ணெய்க் கலயம், எண்ணெய் வழிவதறகான சிறு துவாரம், விளக்கு ஆகிய பகுதிகள் காணப்படுகின்றன. விளக்கில் திரி இட்டு ஏற்றப்பட்ட சுடர் எரிந்து கொண்டிருக்கும். எண்ணெய்க் கலயத்திலிருந்து சிறு துவாரம் வழியாகச் சிறிது சிறிதாக எண்ணெய் விளக்கில் சொட்டிக்கொண்டிருக்கும். இதன் காரணமாக விளக்கும் இரவு பகல் என்று தொடர்ந்து அணையாமல் எரிந்து கொண்டிருக்கும். உருள் கலயத்தின் மேற்பகுதியில் அன்னப்பறவை போன்ற உருவங்களை அமைத்து இருப்பார்கள். இந்த விளக்கு சங்கிலியால் இணைக்கப்பட்டுக் கூரையிலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும். நந்தா விளக்குகள் குறித்த பல செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.


”அணங்குடை வரைப்பகம் பொலிய வந்திறுக்குஞ்

திருமணி விளக்கின் அலைவாய்ச்”

(அகநானுாறு – மணிமிடைப்பவளம், பாடல் எண்.266, 20, )


தெய்வத்தை உடைய குன்றிடத்தே பொலிவுற வந்து தங்கும் அழகிய திருமணிவிளக்கு ஒளிர்வது குறித்து இப்பாடல் விவரிக்கிறது.


”கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி

அந்தி மாட்டிய நந்தா விளக்கின்

மலரணி மெழுக்க மேறிப் பரல்தொழ”

(பட்டினப்பாலை பாடல் வரிகள். 246 – 248)


சிறைப்பிடித்து வந்த பகைவர் மனையோராகிய மகளிர், ஊரார் பலரும் நீருண்ணும் துறையிலே முழுகி, அந்திமாலைப் போதில் ஏற்றிய நந்தா விளக்கினை மலரால் அழகு செய்து வைக்கப்பட்ட மெழுகிய இடம் பற்றி பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.


“வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும்

மாறுசெல் வளியி னவியா விளக்கமும் ”

(பரிபாடல் பாடல். எண்.8: 97-98)


மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் பூசை செய்ய எழுந்து மணக்கும் சந்தனமும், தூபத்துக்குரிய பொருட்களும், காற்றால் அணையாத விளக்கமும், மணங் கமழ்கின்ற மலர்களும் ஏந்திப் பரங்குன்றத்தையடைந்து தொழுவோர் பற்றி பரிபாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.


“எல்வளை மகளிர் மணிவிளக்கெடுப்ப” (சிலப்பதிகாரம்)


“சிந்தாதேவி செழுங்கலை நியமத்து

நந்தா விளக்கே…” (மணிமேகலை)


“நந்தா விளக்குப் புறம் ஆகு என நான்கு கோடி நொந்தார்க் கடந்தோன் கொடுத்தான் பின்னை நூறு மூதூர்” (சீவகசிந்தாமணி:12:187)


சோழர்கள் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில் இவ்வகை விளக்குகள் நுந்தா விளக்கு என்றும் திருநுந்தா விளக்கு என்றும் நொந்தா விளக்கு என்றும் தூண்டாமணி விளக்கு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அளித்த சிறு சிறு நிவந்தங்கள் கோவில் உண்ணாழிகைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நந்தா விளக்குகள் ஏற்றப் பயன்பட்டன. இவை தனித்தனிப் பெயர்களால் அழைக்கப்பட்டன. இவற்றிற்கு உரிய நெய்யினை விவசாயிகள் தனித்தனியே அளித்து வந்தனர். இது தொடர்பாகப் பல தமிழ் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டன.


ஒரு நந்தா விளக்கினுக்கு நிசதம் உழக்கு நெய் (S. I. I. i, 142).


மேற்படி பெருமானடி களுக்கு நந்தாவிளக் கெரிப்பதாக (S. I. I. iii, 97).


சோழர்களின் நிர்வாகம்


தென்னிந்தியா முழுவதும் முதன்முறையாகச் சோழப் பேரரசின் ஆட்சியின் கீழ் தழைத்தோங்கியது. சோழர்களின் நிர்வாகம் மைய அரசு (Central Government), மண்டல அரசு (Provincial Government) மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் (Local Self Government) ஆகிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. இந்த நிர்வாக அமைப்புகள் வாயிலாகச் சோழர்களின் நிர்வாகம் பரவலாக்கப்பட்டிருந்தது.


உள்ளாட்சி நிர்வாகம்


உள்ளாட்சி நிர்வாகத்திலும் நீதி விசாரனையிலும் சோழர்கள் முன்னோடியாக விளங்கினர். சோழ அரசில் மக்கள் வாழ்விடங்களின் மிகச்சிறிய அலகு (Smallest Unit) கிராமம் ஆகும். சராசரிக் குடிமக்கள் வசித்த வாழ்விடம் ஊர் என்று அழைக்கப்பட்டது. பிராமணர்கள் வசித்த வாழ்விடத்திற்கு கிராமம் என்று பெயர், இந்தக் கிராமங்கள் சதுர்வேதி மங்கலம் அல்லது பிரம்மதேயம் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டன. வணிகர்களின் வாழ்விடம் நகரம் என்று வழங்கப்பட்டது. நாடு (District) பல கிராமங்களை உள்ளடக்கிய பிரிவு ஆகும். இவை கோட்டம் அல்லது கூற்றம் (Division) என்றும் அழைக்கப்பட்டன. வளநாடு என்பது பல நாடுகளை உள்ளடக்கிய பிரிவு ஆகும். சோழ நாட்டின் ஒரு மண்டலத்தில் ஒன்பது வளநாடுகள் இடம்பெற்றிருந்தன.


ஊர்கள், கிராமங்கள் மற்றும் நகரங்களை, முறையே ஊர் சபைகள், கிராம சபைகள், மற்றும் நகர சபைகள் என்ற பெயருடன் கூடிய தன்னாட்சி அமைப்புகள் நிர்வாகம் செய்தன. உழவர்கள் குழுவினர்களுக்கென்று சித்திரமேழி என்ற நிர்வாகக்குழு செயல்பட்டது. கோட்டத்து அவைகளில் (Divisional Assemblies) மேலே குறிப்பிட்ட சபைகளின் பிரதிநிதிகள் அங்கம் வகித்தனர். கோட்டத்து அவையின் தலைவர்கள் நாட்டார்கள் என்று அழைக்கப்பட்டனர். இந்த நாட்டவை மாவட்ட அளவிலான நிர்வாகத்தை மேற்கொண்டிருந்தது. சட்டம் ஒழுங்கு இந்தச் சபைகளால் நிர்வாகிக்கப்பட்டன. இச்சபைகளின் கூட்டங்கள் (Assembly) ஊர் பொது இடங்களிலோ அல்லது கோவில் மண்டபங்களிலோ நடைபெற்றன.


கோவில்கள் படிநிலை நிர்வாக மையங்கள் – ஒருங்கிணைந்த சமுதாய மையங்கள்


சோழ கோமரபினர் (Chola Dynasty) சைவர்கள் ஆவர். சிவனுக்காகப் பல ஆலயங்கள் இவர்களால் கட்டப்பட்டன. கிராமங்களில் இருந்த கோவில்கள் படிநிலை நிர்வாக மையங்களாகவும் (Hierarchical Administrartion Centers) ஒருங்கிணைந்த சமுதாய மையங்களாகவும் (Integrated Social Centers) செயல்பட்டன. கோவில்களை நிர்வகித்து நடத்தும் அதிகாரங்கள் ஊர் மற்றும் கிராம சபைகள் மற்றும் நகரவைகளுக்கு இருந்தன.


கி.பி. 1000 ஆம் ஆண்டு, முதலாம் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் நிலங்கள் முறையாக அளக்கப்பட்டு மதிப்பிடப்பட்டன. நிலத்தின் அளவுகள், எல்லைகள், உரிமையாளர் பெயர் குறித்த தகவல்கள் நிலப் பதிவுகளாக (Land Registry) பதிவு செய்யப்பட

Who Voted

Leave a comment