1
பேனாவின் கைப்பிடித்து... : டி.வி.எஸ்.சோமு
திரு டி.வி.எஸ்.சோமு அவர்கள், வாழ்வில் எதிர்கொண்ட நிகழ்வுகளை ஊடகத்துறையில் பெற்று வரும் அனுபவப் பின்புலத்தோடு “பேனாவின் கைப்பிடித்து...” என்ற தலைப்பில் நூலாக எழுதியுள்ளார். 

பல துறையைச் சார்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல் பிரமுகர்களுடனான நேர்காணல்களையும், அவர்களோடு பழகிய தருணங்களையும் அவர் நினைவுகூர்ந்த விதம் சிறப்பாக உள்ளது.
பட்டினியாய்க் கிடப்பது பத்திரிக்கையாளர் வாழ்வில் சகஜம்தான் என்ற ஒரு யதார்த்தத்தைக் கண்டபோது அவர் வெளிப்படுத்துகின்ற உணர்வு நமக்கும் அந்த பசி வந்துவிட்டதுபோன்ற எண்ணம். (பத்மா என்கிற தாய்)

வி.ஐ.பி. ஜாதகம் என்று கூறி, இயற்கையெய்தியவரின் ஜாதகத்திற்கு பலவித கணிப்புகள் பெறப்படுவதும், கணிப்புக்கு அவர்கள் மறுப்போ விளக்கமோ சொல்லவில்லை என்பதும் தரும் வியப்பு. (அதிர வைத்த சோதிடர்கள்)  

உடையார்பாளையம் அரண்மனைக்குச் சென்றபோது, அங்கு வாழ்ந்து தாழ்ந்தவர்களின் கொடுமையையும், ஆற்றாமையையும் வாசிக்கும்போது கரைந்து போகிறது வாசகரின் உள்ளம். (காலம் சிதைத்த கோட்டை)

காஷ்மீரில் பணியாற்றி வந்த இராணுவ வீரர்கள் சிலரை நேர்காணல் எடுத்தபோது அவர்கள் சொன்ன செய்திகள் அவரை மட்டும் உறைய வைத்துவிடவில்லை. நம்மையும் சேர்த்துத்தான். (உறைய வைக்கும் உண்மை)

கூச்சப்பட்டுக்கொண்டே குறைவாகச் சாப்பிட்டபோது ஆசிரியர் சாவி அவர்கள்,  அவரையும் பிறரையும் நன்கு சாப்பிட வைப்பதற்காக தனி மேசைக்கு அனுப்பிய உத்தியை எண்ணி வியந்தது அவர் மட்டுமல்ல, நாமும்.  (மனிதர்கள் பலவிதம்..சாவி ஐயா ஒருவிதம்)

தன் தந்தை அனுப்பி மணியார்டர் தொகையை அவருக்கே திருப்பியனுப்ப, நேரில் தந்தை சென்னையில் கொண்டுவந்து அதனைத் தந்தபோது அப்பாக்கள் வரம் என்று கூறி வியக்கும் தந்தைமீதான பாசம். (அப்பா அனுப்பிய மணியார்டர்)

ஒரு குழந்தை மாதிரி அம்மாவை பார்த்துக்கொண்டேன் என்று கூறி தனக்கு வரமும், சாபமுமான காலம் என நினைத்த வேளையில் எல்லோரையும் தவிக்கவிட்டு அம்மா சென்றபோது, அம்மாக்களே..நாங்கள் உங்களுக்கு எப்படி முக்கியமோ, அதேபோல நீங்கள் எங்களுக்கு முக்கியம் என்று ஏங்கித் தவிக்கும் தவிப்பு. (அம்மாக்கள் கவனிக்கவும்)
ஒவ்வொரு பதிவிலும் தன் அனுபவத்தை மிகவும் அருமையாக முன்வைத்துள்ளார் நூலாசிரியர். முகநூல் பதிவிற்கும் நாளிதழ் செய்திக்கும் இடையேயான வேறுபாடு, அனாவசியமான பொது விடுமுறைகள், சாதியின் பெயரால் பிரிவினை என்பன போன்ற பலவற்றை ஆழமாகப் பதிந்துள்ள நூலாசிரியர், தான் எடுத்து வெளிவராத மிகச் சில பேட்டிகளில் சிவாஜி கணேசனின் பேட்டியும் ஒன்றாகிவிட்டது என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.      

    ஒரு இதழாளர் தன் எழுத்துகளை ஆவணப்படுத்தப்படும்போது அது அவர்  தன்னை சுய மதிப்பீடு செய்துகொள்வதற்கான தருணமாக அமையும். உண்மை வெளிவர வேண்டும், சமூகத்திற்கு நல்லவற்றைக் கொண்டு செல்ல வேண்டும், அறிந்தவற்றைப் பகிர வேண்டும் என்பன போன்ற உணர்வுகளைக் கொண்டு அதனை கடைபிடித்து வருபவர் நூலாசிரியர்.
தமிழக எழுத்தாளர்களில் ஒருவரான தஞ்சாவூரைச் சேர்ந்த திரு அழகிரி விசுவநாதன் (1931-2018) அவர்களின் மகனான இந்நூலாசிரியரை  கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நான் அறிவேன். முகநூலில் அவ்வப்போது சில பதிவுகளைப் பகிர்ந்தபோது, அவை நூல் வடிவம் பெறவேண்டும் என்று நான் வெளிப்படுத்திய ஆர்வத்தினை பெருமுயற்சி மேற்கொண்டு நிறைவேற்றியுள்ளார். அவர் மென்மேலும் பல நூல்களை எழுதுவதற்கு இது ஓர் இனிய ஆரம்பமாக இருக்கும் என நம்புகிறேன் அவருக்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


நூல் வேண்டுவோர் தொடர்புகொள்ள வேண்டிய எண்.

நூலட்டை, பிற புகைப்படங்கள் நன்றி : திரு டி.வி.எஸ்.சோமு முகநூல் பக்கம்

Who Voted

Leave a comment