1
299. அணையா விளக்கு
"எங்க அழைப்பை ஏற்று எங்க ஊருக்கு வந்தது பத்தி ரொம்ப சந்தோஷம். எங்களுக்கு ரொம்பப் பெருமையா இருக்கு" என்றார் தாமோதரன்.

"ஆன்மீகச் சொற்பொழிவு செய்யறது என்னோட பணி. எங்க கூப்பிடறாங்களோ அங்க போறேன். எனக்குத் தெரிஞ்ச விஷயங்களை சொல்லிட்டு வரேன்" என்றார் ஆன்மீகச்  சொற்பொழிவாளர் அருட்செல்வம்.

"சாயந்திரம் மண்டபத்திலே உங்க சொற்பொழிவு. அதுக்கு முன்னால எங்க ஊர் கோவிலுக்குப் போயிட்டு வந்துடலாம்."

"நான் இந்த ஊருக்கு வந்துட்டேன். சொற்பொழிவு முடிஞ்சு ஊருக்குத் திரும்பற வரையிலே என் நிகழ்ச்சிகளை நீங்கதான் தீர்மானிக்கணும். ஆங்கிலத்தில சொன்னா ஐ ஆம் அட் யுவர் டிஸ்போஸல்!" என்றார் அருட்செல்வம் சிரித்தபடி.

மாலை கோவிலுக்குள் நுழையுமுன், "இந்தக் கோவில்ல ஒரு விசேஷம் உண்டு. இங்க அணையா விளக்குன்னு ஒரு தீபம் இருக்கு. பல நூறு வருஷங்களா, இந்தக் கோவில் நிறுவப்பட்டதிலேந்தேன்னு நினைக்கறேன், இந்த தீபம் எரிஞ்சுக்கிட்டே இருக்கு. எந்த ஒரு புயல் மழை வந்து ஊரே அடங்கிக் கிடந்தாலும், எப்படியோ கோவிலுக்கு வந்து தீபத்துக்கு எண்ணெய் போட்டு அதைத் தொடர்ந்து எரிய வச்சுக்கிட்டிருக்காங்க!" என்றார் தாமோதரன்.

"எரிய வச்சுக்கிட்டிருக்காங்கன்னு ஏன் சொல்றீங்க? எரிய வச்சுக்கிட்டிருக்கோம்னு சொல்லுங்க! நீங்களும் இந்த ஊர்க்காரர்தானே! இது பெரிய விஷயம். இது மாதிரி காரியங்களைத் தொடர்ந்து செய்யறதுங்கறது சாதாரண விஷயம் இல்ல. நான் வேற ஊர்கள்ள பேசறப்ப இந்தக் கோவிலைப் பத்தி சொல்றேன். வெளியூர்க்கறாங்க பல பேர் கூட இந்த அணையா விளக்குக்கு எண்ணெய் வாங்க உதவி செய்ய முன் வருவாங்க" என்றார் அருட்செல்வம்.

தாமோதரன் நன்றி தெரிவிக்கும் விதமாகக் கை கூப்பினார் 

கோவிலில் வழிபாடு முடிந்து வெளியே வருமுன் அருட்செல்வம் கோவில் அர்ச்சகரை அழைத்து "உங்களை எங்கேயோ பாத்திருக்கேனே!" என்றார். 

"ஆமாம். மலையூர்ப்பட்டிங்கற ஊர்ல இருக்கற கோவில்ல இருந்தேன். அங்கே நீங்க வந்திருக்கேள். நீங்க ஞாபகம் வச்சுண்டிருக்கறது ரொம்பப் பெருமையா இருக்கு!" என்றார் அர்ச்சகர்.

"எங்கே ஞாபகம் வச்சுக்கிட்டேன்? உங்க முகம் நினைவிலே இருந்ததே தவிர, எங்கே பாத்தேன்னு ஞாபகம் வரலியே!" என்று சிரித்துக்கொண்டே கூறிய  அருட்செல்வம், "சந்தோஷம், வரேன்" என்று அவரிடம் விடை பெற்றார்.

வெளியில் வந்ததும் தாமோதரனிடம், "மலையூர்ப்பட்டி கோவில் பெரிசு. அங்கே அவருக்கு எல்லாம் வசதியா இருந்திருக்கும். வருமானமும் நிறைய இருக்கும். ஏன் அதை விட்டு விட்டு வந்தார்னு தெரியல" என்ற அருட்செல்வம், "உங்க கோவிலைக் குறைச்சுச் சொல்றேன்னு நினைக்காதீங்க. அது இன்னும் பெரிய கோவில். அதான் சொன்னேன்" என்றார்.

"நீங்க சொன்னது சரிதான். அது பெரிய கோவில்தான். அதோட ஒப்பிடச்சே இது சின்னக் கோவில்தான். அந்தக் கோவில்ல அர்ச்சகரா இருக்கறது பெரிய அந்தஸ்துதான். நல்ல சம்பளம், வீடு எல்லாம் உண்டு. அதையெல்லாம் வீட்டுட்டுத்தான் இங்க வந்திருக்காரு அவரு."

"ஏன் அப்படி?" என்றார் அருட்செல்வம் வியப்புடன்.

"அந்தக் கோவில் தனிப்பட்ட ஒரு குடும்பத்துக்குச் சொந்தமானது. வருமானத்தைக் குறைச்சுக் காட்டணும்னு அந்தக் கோவிலோட சொந்தக்காரங்க இவரை வற்புறுத்தி இருக்காங்க. அர்ச்சனை, அபிஷேகம் இதுக்கெல்லாம் முறையா ரசீது கொடுக்காம பணத்தை வாங்கி அவங்ககிட்ட கொடுக்கணும்னு சொல்லி இருக்காங்க. அவரு அதுக்கு ஒத்துக்கல. அதனால அவரால அங்கே தொடர்ந்து வேலை பாக்க முடியல. இந்த ஊர்க் கோவில்ல அர்ச்சகர் வேலை காலி இருக்குன்னு தெரிஞ்சு எங்ககிட்ட வந்து கேட்டாரு. ஒரு உண்மையானவர்தான் எங்களுக்கு வேணும்னு நாங்க அவரை இங்க வச்சுக்கிட்டிருக்கோம்" என்றார் தாமோதரன்.

அருட்செல்வம் மௌனமாக ஏதோ யோசித்தபடி வந்தார்.

ன்று இரவு மண்டபத்தில் சொற்பொழிவாற்றும்போது அருட்செல்வம் சொன்னார். "இந்த ஊர்க் கோவில்ல இருக்கற அணையா விளக்கைப் பத்தி எங்கிட்ட சொன்னாங்க. ரொம்பப் பெரிய விஷயம் இது. இதைப் பத்தி நான் போற இடத்திலெல்லாம் சொல்றேன்னு சொன்னேன். நான் சொல்றதைக் கேட்டு வேற சில கோவில்ல கூட இது மாதிரி அணையா தீபம் அமைக்கலாமான்னு கூட நினைப்பாங்க. ஆனா இந்த ஊர்ல, இந்த ஊர்க் கோவிலிலேயே  இன்னொரு அணையாதீபம் இருக்கு. உண்மைங்கற விளக்கா இருக்கற கோவில் அர்ச்சகர்த்தான் அந்த அணையா தீபம். நீங்க ஒவ்வொத்தருமே அந்த அணையாதீபம் மாதிரி ஒரு உண்மை விளக்கா இருக்கணும்கறது என்னோட வேண்டுகோள். அந்த அணையாதீபம் பத்தியும் நன் எல்லா இடங்களிலேயும் சொல்லப் போறேன். அவர் மாதிரி இன்னும்பல அணையா தீபங்கள் ஒளி விட்டால், அது எல்லோருக்குமே நல்லது."
துறவறவியல் 
அதிகாரம் 30      
வாய்மை   
குறள் 299
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

பொருள்:
வெளியில் உள்ள இருளைப் போக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் ஆக மாட்டா. நல்லவர்களுக்கு அவர்கள் மனதில் ஒளிரும் பொய்யாமை என்ற விளக்கே உண்மையான விளக்காகும்
குறள் 300 (விரைவில்)

Who Voted

Leave a comment