1
ரியலி கிரேட்டா தன்பர்க் : புதிய தலைமுறை பெண், அக்டோபர் 2019
ரியலி கிரேட்டா தன்பர்க் என்ற தலைப்பில் 
புதிய தலைமுறை பெண் அக்டோபர் 2019 இதழில் (மலர் 3,இதழ் 4, பக்.88-89) வெளியான கட்டுரையினையும், 
அதன் மேம்படுத்தப்பட்ட வடிவினையும் பகிர்வதில் மகிழ்கிறேன், 
திரு சு.வீரமணி, புதிய தலைமுறை பெண் இதழுக்கு நன்றியுடன்

“2078இல் நான் என்னுடைய 75ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவேன். அந்த மகிழ்ச்சியான பொழுதில் என் குழந்தைகளோடு இருப்பேன். அவர்கள் உங்களைப் பற்றி என்னிடம் கேட்பார்கள். பருவ நிலையைக் காக்க போதிய நேரம் இருந்தபோதும் நீங்கள் எங்களுக்காக ஏன் எதுவும் செய்யவில்லை என்பார்கள்.  அனைத்திற்கும் மேலாக நீங்கள் உங்கள் குழந்தைகளை நேசிப்பதாகக் கூறுகின்றீர்கள். ஆனால் அவர்களின் கண்களுக்கு முன்பாகவே அவர்களுடைய எதிர்காலத்தை முற்றிலும் சுக்குநூறாக்கிவிடுகின்றீர்கள்”. இப்படிப் பேசியவர் ஒரு மாணவி என்றால் அனைவருக்கும் வியப்பாக இருக்கும். 


பார்ப்பதற்கு நம் அண்டைவீட்டுப் பெண்ணைப் போலக் காணப்படுகிறார். தினமும் நாம் பார்த்த முகம் போலத் தெரிகிறது. பள்ளி மாணவியான இவர் நம்மை வித்தியாசமாகப் பார்க்கவைக்கின்றார்.  இதுவரை வரலாறு கண்டிராத, 20.9.2019 முதல் 27.9.2019 வரை ஒருவார காலம் 130க்கும் மேற்பட்ட நாடுகளில் 4000 இடங்களில் நடைபெறுகின்ற, இலட்சக்கணக்கானவர்கள் பங்கேற்ற, சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் போராட்டத்திற்கு வித்தாக அமைந்தவர். உலக கவனத்தை ஈர்ப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சியில் பள்ளி மாணவ மாணவிகள் மட்டுமன்றி முதன்முதலாக பெரியவர்களும் கலந்துகொண்டனர். இந்தியாவிலும் இப்போராட்டம் நடைபெற்றது. நியூயார்க்கில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொண்டார் கிரேட்டா தன்பர்க்.

உலக வெப்பமயமாதலும், பருவ நிலை மாற்றமும் மனித மற்றும் பிற உயிரினங்களின் அழிவிற்கான தொடக்கம் என்பதால் பருவ நிலை காக்கப்படவேண்டும் என்ற அறைகூவல் விடுத்து, இதுதொடர்பாக அனைவரும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி ஆகஸ்டு 2018இல், தன்னுடைய 15ஆம் வயதில் (பி.3 ஜனவரி 2003) ஸ்வீடன் பாராளுமன்றத்திற்கு முன்பாக ஒரு சிறிய பதாகையுடன் போராட்டத்தைத் தொடங்கிய கிரேடடா தன்பர்க் அதனைத் தொடர்கிறார்.
சுற்றுச்சூழல் தொடர்பான அப்பிரச்னையை முன்னெடுத்தபோது இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னாள்களில் வெள்ளிக்கிழமைதோறும் தன் பள்ளி வகுப்பினைப் புறக்கணித்து ஸ்வீடன் நாடாளுமன்றத்துக்கு வெளியில் போராட்டம் நடத்த ஆரம்பித்தார்.  இதையடுத்து, ‘எதிர்காலத்துக்காக வெள்ளி' என்ற இயக்கத்தைத் தொடங்கினார். (#fridaysforfuture) என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி உலகம் முழுவதும் பிரபலமாக்கினார்.  இதன் மூலம் உலக மக்களின் கவனம் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து பல நகரங்களுக்கும் சென்று பொதுமக்களையும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களையும் சந்தித்து பருவ நிலை தொடர்பான விழிப்புணர்வினைத் தொடர்ந்து மேற்கொள்ள ஆரம்பித்தார். பள்ளி மாணவியின் இச்சாதனையை உலகமே வியந்து நோக்குகின்றது.


ஜனவரி 2019இல், லண்டனிலிருந்து வெளிவருகின்ற கார்டியன் இதழில் கிரேட்டா தன்பர்க் எழுதுகிறார்: "ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அமைப்பான கால நிலை மாற்றம் தொடர்பான இடை அரசு, நாம் நம் தவறுகளைச் சரிசெய்யாத நிலையில் 12 ஆண்டுகளுக்கும் குறைவான இடைவெளியில் உள்ளோம் என்று கூறுகிறது. அக்காலகட்டத்திற்குள் எதிர்பார்க்கமுடியாத பலவிதமான மாற்றங்கள் சமூகத்தின் அனைத்துநிலைகளிலும் காணப்படும். அதில் குறைந்த அளவு 50 விழுக்காடு கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வும் அடங்கும்."அதே இதழுக்கு 11 மார்ச் 2019இல் அளித்த பேட்டியில், “நான் சற்று அதிகமாக நினைக்கிறேன். சிலர் அப்படியே விட்டுவிடுவர். எனக்கு வருத்தம் தருவதையோ, சோகம் தருவதையோ அப்படியே விட்டுவிட முடியவில்லை. பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் நான் சிறியவளாக இருக்கும்போது எங்களுடைய ஆசிரியர்கள் எங்களிடம் திரைப்படங்களைப் போட்டுக் காண்பிப்பர். அப்போது கடலில் பிளாஸ்டிக் மிதப்பதையோ, பசியோடு இருக்கின்ற போலார் கரடிகளையோ பார்க்கும்போது முழுதும் அழுதுகொண்டேயிருப்பேன். என் நண்பர்களோ படத்தைப் பார்க்கும்போது மட்டுமே வருத்தப்படுவர், படம் முடிந்ததும் மற்றவற்றைப் பற்றி நினைக்க ஆரம்பிப்பர். என்னால் அவ்வாறு இருக்க முடியவில்லை. அந்தப் படங்கள் அனைத்தும் என் மனதில் ஆழமாகக் பதிந்துவிட்டன.”

முதல் தர நுட்பவியலாளர்கள், அறிவியலாளர்கள், சமூகச் சேவையாளர்கள், அரசியல்வாதிகள் கலந்து கொண்டு 20 நிமிடத்துக்குள் முக்கிய கருத்துக்களைப் பற்றி விவாதிக்கின்ற டெட் மாநாடு ஸ்டாக்ஹோமில் ஒவ்வோராண்டும் நடைபெறும். 24 நவம்பர் 2018இல் நடைபெற்ற அம்மாநாட்டில் பேசும்போது அவர், பருவநிலை மாற்றம் பற்றி முதன்முதலாக தன் எட்டு வயதில் கேள்விப்பட்டதாகவும், அதற்கு முக்கியத்துவம் தராப்படாததற்குக் காரணம் புரியவில்லை என்றும், தன்னுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தாவிட்டால் தான் இறந்துகொண்டிருப்பதாக உணர்வதாகவும் கூறினார். 2018வாக்கிலேயே நீங்கள் ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தன் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் என்னை நோக்கிக் கேட்பர்” என்ற தன்பர்க், உரையின் நிறைவாக  “விதிமுறைகளுடன் விளையாடிக்கொண்டு நாம் உலகை மாற்றமுடியாது. ஏனென்றால் விதிகள் மாற்றப்படவேண்டும்” என்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரான அந்தோனியோ குத்தேரஸ் தன்பர்க்கால் முன்னெடுக்கப்படும் பள்ளிப்போராட்டங்களைப் பற்றிக் கூறும்போது “என் தலைமுறை பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள என் சந்ததியினர் தவறிவிட்டனர். தற்போது இளம் சமுதாயத்தினரால் அது நன்கு உணரப்படுகிறது. இதில் ஒன்றும் அதிசயம் இல்லை, அவர்கள் கோபத்தில் இருக்கின்றார்கள்”  என்றார்.


அவருடைய முயற்சிக்கு பல நாடுகளும், அரசுகளும் ஆதரவினைத் தர ஆரம்பித்துள்ளன. பலர் அவரைப் பாராட்டுகின்றனர். பிரிட்டனின் சுற்றுச்சூழல் செயலர் மைக்கேல் கோவ் கூறுகிறார் :  “உன்னை கவனிக்கும்போது நான் பெருமைப்படுகிறேன். அதேசமயம் பொறுப்புணர்வையும், குற்ற உணர்வினையும் அடைகிறேன்.  நான் உன் பெற்றோரின் தலைமுறையைச் சேர்ந்தவன். பருவநிலை மாற்றத்தை உணரவோ, சுற்றுச்சூழல் சீரழிவினை சரிசெய்யவோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.”


ஐக்கிய ராஜ்யத்தின் பருவநிலைச்சட்டம் அறிமுகக் காரணமான தொழிற்கட்சியின் அரசியல்வாதியான இட் மிலிபான்ட் கூறுகிறார்: “நீ எங்களை விழிக்க வைத்துவிட்டாய். நாங்கள் உனக்கு நன்றி கூறுகிறோம். போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் நம் சமுதாயத்திற்கு ஒரு கண்ணாடியாக விளங்கினர். நீ நல்ல பாடத்தைக் கற்பித்துவிட்டாய். கூட்டத்திலிருந்து தனியாக நின்று தெளிவுபடுத்திவிட்டாய்.” 
Who Voted

Leave a comment