1
காந்தி 150 : எங்கள் இல்லத்தில் காந்தி
காந்தியடிகளின் 150ஆம் ஆண்டு விழா கொண்டாடிக்கொண்டிருக்கும் இவ்வினிய வேளையில், எங்கள் இல்லத்தில் என்றும் இருக்கும் காந்தியின் புகைப்படமும் அதற்கான பின்புலமாக எங்கள் தாத்தாவும் அமைந்தது நினைவிற்கு வந்தது. 1960களின் இறுதியில் கும்பகோணம் திருமஞ்சனவீதியில் நான்காம் வகுப்போ, ஐந்தாம் வகுப்போ படித்துக்கொண்டிருந்த நேரம்.  கும்பகோணத்தில் சம்பிரதி வைத்தியநாதர் அக்கிரகாரத்தில் இருந்த எங்கள் வீட்டிற்கு எங்கள் தாத்தாவைக் காண ஒருவர் வந்திருந்தார். அவரைப் பற்றி விசாரிப்பதற்குள், அவர் எங்கள் வீட்டு வாசலில் நிலைப்படியின்மேல் பொக்கைவாயுடன் சிரித்துக்கொண்டிருந்த மகாத்மா காந்தியின் படத்தைப் பார்த்து வணக்கம் சொன்னார். அந்த புகைப்படத்துடன் நேரில் பேசுவதைப் போல பேசினார். அதற்குள் எங்கள் தாத்தா வந்துவிடவே, இருவரும் வீட்டிற்குள் வரவேற்பறையில் வந்து பேச ஆரம்பித்தனர். எங்கள் தாத்தா அப்போதைய காங்கிரஸ்காரர். எப்போதும் கட்சிக்காரர்கள் வந்துகொண்டேயிருப்பார்கள். அரசியல்ரீதியாக எங்கள் தாத்தா கும்பேஸ்வரர் மேலவீதியில் குடியிருந்த பி.ஆர்., தெற்கு வீதியில் இருந்த தேரி, பேட்டைத்தெருப்பள்ளி அருகே இருந்த குமரசாமி உள்ளிட்ட பலருடன் தொடர்பு வைத்திருந்தார்.  பலர் அவரைப் பார்க்க வருவர். அவரும் பல பிரமுகர்களைப் பார்க்கச் செல்வார். அந்த வகையில் அவர் வந்திருந்தார் என்பதை பின்னர் அறிந்தோம். எங்கள் வீட்டில் காங்கிரஸ் கொடியுடன் கூடிய கொடிக்கம்பம் இருந்தது. சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி ஆகிய விழாக்களின்போது எங்கள் தாத்தா எங்கள் வீட்டில் கொடி ஏற்றுவார் .  தொடர்ந்து நண்பர்கள் அழைப்பிற்கேற்ப ஊரின் பல இடங்களில் சென்று கொடி ஏற்றுவார். பின்னர் இனிப்புகளும் சில சமயங்களில் பள்ளிக்குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகங்களும் வழங்குவார். அவ்வாறான விழாக்களில் காந்தியின் படம் நடுநாயகமாக இருப்பதைப் பார்த்துள்ளேன்.

பொக்கைவாய்ச்சிரிப்பு
காந்தி படத்துடன் பேசிய அவருடைய அன்னியோன்னியமான பேச்சு என்னுள் ஏதோ ஒரு தாக்கத்தை உண்டாக்கியது. இரு பக்கங்களும் திண்ணைகளைக்கொண்ட எங்கள் வீட்டில் நிலைப்படியின் இரு புறங்களிலும் மாடங்கள் இருக்கும். அந்த மாடங்களுக்கு மேலே சற்று நடுவில் அமைந்திருந்த அந்த படத்தில் இருந்த காந்தியை பின்னர் அடிக்கடி பார்க்க ஆரம்பித்தேன். ஏதோ ஒரு நல்ல ஆரம்பமாக அதனை நினைத்தேன். அந்தச் சிரிப்பானது பிறரைச் சிந்திக்கவைக்கும் சிரிப்பு, செயலாற்றவைக்கும் சிரிப்பு என்பதை நாளடைவில் உணர்ந்தேன்.

வரவேற்பறையில் தலைவர்களின் படங்கள்
முதல் நிலைப்படியைக் கடந்து உள்ளே  செல்லும்போது இரண்டாவது நிலைப்படி. அதில் மிகப்பெரிய அளவில் அமர்ந்த நிலையில் கழற்றிய மூக்குக்கண்ணாடியைக் கையில் வைத்தபடி உள்ள பெருந்தலைவர் காமராஜர் படம் இருக்கும். இரு நிலைப்படிகளுக்கும் இடையேயுள்ள வரவேற்பறையில்  நடுவில் நின்ற நிலையில் மகாத்மா காந்தி, மார்பளவு வரையிலான  நேரு படங்களும், அறையின் வலது புறச்சுவற்றில் இராணுவ உடையுடன்  சுபாஷ் சந்திரபோஸ் படமும், இடது புறச்சுவற்றில் கம்பீரமாக கைகட்டிக்கொண்டிருக்கும் சுவாமி விவேகானந்தர் படமும் காணப்படும். நின்ற நிலையில் காந்தியைக்கொண்ட படத்திலும் அவருடைய புன்னகையைக் காணமுடியும். இந்த அறையில்தான் தாத்தாவைக் காண வருவோர் அமர்ந்து பல மணி நேரங்கள் விவாதித்துக்கொண்டிருப்பர்.

கமலா நேரு வாசகசாலை
எங்கள் தாத்தாவும், பிற நண்பர்களும் கூடும் மற்றொரு இடம் கமலா நேரு வாசகசாலை. கும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதியும், மேல வீதியும் சந்திக்கும் இடத்தில் அந்த வாசகசாலை இருந்தது. வாசகசாலைக்கு நாளிதழ்கள் வர தாமதமானாலோ, அங்கு இதழ்கள் இல்லையென்றாலோ எங்கள் தாத்தா எங்கள் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும் நவசக்தி, மற்றும் நாத்திகம் இதழ்களை அங்குகொண்டுபோய் வைத்துவரச் சொல்வார். படிக்கவேண்டிய அன்றைய நாளுக்கான இதழ்கள் வெளியே இருக்கும். படிக்கப்பட்ட இதழ்கள் அங்குள்ள ஒரு மரப்பெட்டியில் வைத்து மூடப்பட்டிருக்கும். அங்கும் காந்தியின் புகைப்படத்தினைப் பார்த்துள்ளேன். இவையனைத்தும் சுமார் 40 வருடங்களுக்கு முன் நடந்தவை. 

சத்திய சோதனை
எங்கள் வீட்டிலும், வாசகசாலையிலும் காந்தியைப் பார்த்ததும்,  வீட்டில் அப்போது பெரியவர்கள், தலைவர்களைப் பற்றி பேசியதும் மனதாரப் பதிந்தது. நாளடைவில் காந்தியின் சுயசரிதையான சத்திய சோதனை நூலை வாங்கி, அதனை ஒரேமூச்சில் படித்துமுடித்தேன். ஒரு வித்தியாசமான ஆன்மாவாகவே அவர் என் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தார். எங்கள் இல்ல நூலகத்தில் சத்திய சோதனை நூல் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) இடம்பெற்றுள்ளது.
சூழல் காரணமாக கும்பகோணத்தைவிட்டுப் பிரிந்து, தஞ்சை வந்த பின்னர் தாத்தா வைத்திருந்தபடியே படங்களை வைக்க விரும்பினேன். எங்கள் வீட்டில் காமராஜர், காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், விவேகானந்தர் ஆகியோரின் படங்களை வைத்தேன். என் தாத்தா அவர்களைப் பற்றிக் கூறிய சொற்கள் இன்னும் மனதில் உள்ளன. இன்றும் காந்தி
இன்றும் எங்கள் இல்ல நிலைப்படியின் கதவுகளுக்கு மேல் மகாத்மா காந்தி நின்ற நிலையில் உள்ள படமும், அருகில் பெருந்தலைவர் காமராஜர் நின்ற நிலையில் உள்ள படமும் இடம்பெற்றுள்ளன. வளரும் தலைமுறையினருக்கு இத்தலைவர்களைப் பற்றி எடுத்துச் சொல்வது நம் கடமையாகும். அந்த வகையில் முக்கியமான இடத்தைப் பெறுபவர் மகாத்மா காந்தி ஆவார். காலம் கடந்தும் நிற்கும் காந்தியின் கொள்கைகள்.

Who Voted

Leave a comment