1
50 ஆண்டுகளாக பயணித்த பாட்டில் கடிதம்
விறகுக்காக அலைந்துகொண்டிருந்தபோது, அலாஸ்காவைச் சேர்ந்த 50வயதான ரஷ்யரான டயிலர் இவானாப், 50 ஆண்டுகளுக்கு முன்னர் பாட்டில் வழியாக அனுப்பப்பட்ட ஒரு செய்தியை கண்டுபிடித்தார்.  ரஷ்ய மொழியில் இருந்த அதனை தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து அதற்கான மொழிபெயர்ப்பினை வேண்டியிருந்தார். அது 20 ஜுன் 1969இல் சுலாக் என்ற ரஷ்யக் கடற்படைக் கப்பலின் கடலோடியால் எழுதப்பட்டிருந்தது. ரஷ்ய ஊடகங்கள் அதனை எழுதியவரான கேப்டன் அனாடாலி போட்ஸானென்கோ எங்கிருக்கிறார் என்று தேட ஆரம்பித்தன.

இவானாப் தன் கிராமத்திலிருந்து 32 கிமீ தொலைவில் விறகுக்காக அலைந்துகொண்டிருந்தபோது பிளாஸ்டிக் மூடியுடன் மிகவும் இறுக்கமாக மூடப்பட்டிருந்த அந்த பாட்டிலைக் கண்டார். சிரமப்பட்டு அதனைத் திறக்க முயன்று பின்னர், பற்களால் கடித்துத் திறந்துள்ளார். உள்ளே காய்ந்த நிலையில் ஒயினோ பழைய ஆல்கஹாலோ இருந்த வாசனை வந்ததாகவும், தாளில் எழுதப்பட்டிருந்த கடிதம் எவ்வித பாதிப்புமின்றி காணப்பட்டதாகவும் கூறினார். முகநூலில் அவர் விடுத்த வேண்டுகோளுக்குக் கிடைத்த மறுமொழி : "சுலாக் ரஷ்யக்கப்பலிலிருந்து வாழ்த்துக்கள்! இந்த பாட்டிலைக் கண்டுபிடிப்பவர்கள் அதனை, இந்தக் கப்பலைச் சார்ந்தோரிடம் தெரிவிக்கவும். உங்களின் நலனுக்கும், நீண்ட வாழ்க்கைக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இனிய பயணம் தொடரட்டும். 20 ஜுன் 1969."பனிப்போர் காலத்தில் எழுதப்பட்ட அக்கடிதம் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியை அறிந்த, தற்போது 86 வயதாகும்  கேப்டன் போட்ஸானென்கோ ஆனந்தக்கண்ணீரில் நனைந்தார். மிகக்குறைந்த வயதில் அவர் அப்போது கேப்டனாக இருந்துள்ளார். அப்போது அவருடைய வயது 33. ரஷ்ய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அதில் உள்ளது தன் கையெழுத்தே என்றும், 1966இல் சுலாக் கட்டுமானப்பணியினை மேற்பார்வையிட்டதாகவும், 1970 வரை அதில் பயணித்துள்ளதாகவும் கூறினார்.பாட்டிலைக் கண்டுபிடித்த இவானாப் தன் முகநூல் பதிவில் "ஒரு சிறிய புகைப்படம் ஓர் அருமையான கதையாக ஆகியுள்ளதை அறிந்து மகிழ்கின்றேன். இதுபோல் எனக்கும் பாட்டிலில் செய்தியை வைத்து அனுப்பும் ஆசை வந்துவிட்டது. எதிர்காலத்தில் என் பிள்ளைகளுடன் சேர்ந்து அவ்வாறான முயற்சியினை மேற்கொள்வேன். ஒரு செய்தியை மட்டும் அனுப்புவோம், அது எங்கே சென்று சேருகிறது என்று பார்ப்போம்". என்றார் ஆவலோடு.இதற்கு முன்னரும் இதுபோன்று பாட்டிலில் அடைத்த செய்தி ஒன்று இவ்வாறாகக் கண்டுபிடிக்கப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கதாகும்.

துணை நின்றவை

Russian sailor’s 1969 message in a bottle washes up in Alaska, BBC News, 19 August 2019

‘Greetings from Cold War’: Dated 1969, Alaska Man Discovers Message in Bottle from Russian Sailor, News 18, 18 August 2019

Alaska man discovers message in bottle from Russian Navy 50 years after it was sent, USA Today, 18 August 2019

Who Voted

Leave a comment